பாடல் எண் :4049

தொண்டுரிமை புரக்கின்றார் சூழ்வேலை யுலகின்கண்
அண்டர்பிரா னமர்ந்தருளு மாலயங்க ளானவெலாங்
கண்டிறைஞ்சித் திருத்தொண்டின் கடனேற்ற பணிசெய்தே
வண்டமிழின் மொழிவெண்பா வோரொன்றா வழுத்துவார்;
4
(இ-ள்) தொண்டு உரிமை புரக்கின்றார் - திருத்தொண்டினது உரிமைச் செயல்களை வழுவாமற் காத்து வருகின்ற நாயனார்; சூழ்வேலை...இறைஞ்சி - கடல் சூழ்ந்த இந்நில உலகத்திலே தேவர் பெருமானாராகிய சிவபெருமான் விரும்பி விளங்க எழுந்தருளிய ஆலயங்க ளெல்லாவற்றையும் சென்று கண்டு வணங்கி; திருத்தொண்டின்........செய்தே - திருத்தொண்டுக் கேற்ற கடமையாகிய பணிவிடைகள் எல்லாவற்றையும் செய்தே; வண்டமிழின்......வழுத்துவார் - ஒவ்வோர் பதியிலும் வளப்பமுடைய தமிழின் வெண்பா ஒவ்வொன்றாகச் சேர்த்தித் துதிப்பாராகி;
(வி-ரை) உரிமை - உரிமைச் செயல்கள் புரத்தல் - வழுவாமற் காத்தல்; முட்டாது செய்தல்.
அண்டர்பிரான்.....கண்டிறைஞ்சி - தேவ தேவராகிய சிவபெருமானுடைய பதிகள் தோறும் யாத்திரையாகச் சென்று வணங்கி. எல்லா(மு)ம் - அனைத்தையும் முற்ற என்பது குறிப்பு; முற்றும்மை தொக்கது. “கோயில்களெல்லா மெய்திÓ (4051) என மேலும் கூறுதல் காண்க.
அண்டர்பிரான்.........ஆன எலாம் - இவ்வடி முற்றுமோனை. உலகின்கண் - ஆலயங்கள் - சிவனை வணங்கி நலம் பெறும் வாய்ப்புக்கள் இந்நிலவுலகில்தான் உள்ளன என்பது குறிப்பு. “புவனியிற்போய்Ó (திருவா).
திருத்தொண்டின் கடன் ஏற்றபணி - இவை ஏனைய சரியைத் தொழில்களும் அடியார் வழிபாடும் ஆம். ஏகாரம் தேற்றம். கடன் - முறைமை.
வழுத்துவார் - வழுத்தும் நியமம் பூண்டாராகி; ஓரொன்றா - ஒவ் வோர் பதிக்கு ஓர் ஓர் வெண்பாவாக; வழுத்துவார் - துதித்தலை மேற்கொண்டனராகி.
இந்நியமத்தினை முதலிற் றொடங்கி ஆற்றின் இடம் தில்லைச் சிற்றம்பலமாம் என்பது மேல்வரும் பாட்டாலுணர்த்தப்படும்.