பாடல் எண் :4050

பெருத்தெழுகா தலில்வணங்கிப் பெரும்பற்றத் தண்புலியூர்த்
திருச்சிற்றம் பலத்தாடல் புரிந்தருளுஞ் செய்யசடை
நிருத்தனார் திருக்கூத்து நேர்ந்திறைஞ்சி நெடுந்தகையார்
விருப்பினுடன் செந்தமிழின் வெண்பாமென் மலர்புனைந்தார்.
5
(இ-ள்) பெருத்தெழு காதலில் வணங்கி - பெருகி எழுகின்ற காதலால் வணங்கி; பெரும்பற்ற.....நேர்ந்திறைஞ்சி - தண்ணிய பெரும் பற்றப் புலியூரில் திருச்சிற்றம்பலத்தின்கண் திருக்கூத்தியற்றும் சிவந்த சடையினையுடைய கூத்தரது திருக்கூத்தினை நேர்பட்டுக் கும்பிட்டு; நெடுந்தகையார்.....புனைந்தார் - பெருந்தகைமை யுடையார் விருப்பத்துடனே செந்தமிழினிய, வெண்பாவாகிய மெல்லிய மலரைப் புனைந்தருளினர்.
(வி-ரை) பெருத்தெழு காதல் - மேன்மேலும் வளர்ந்தோங்கும் பெருவிருப்பம். ஆராமையால் மிகுகின்ற; “ஆராமைÓ (3570); காதலால் - அன்புடன்.
பெரும்....சிற்றம்பலத்து - “தில்லைச்சிற்றம்பலமேÓ என்ற திருவெண்பாவை விரித்தது.
நேர்ந்து - சேர்ந்து கண்டு முற்பட்டு வணங்கி; “சேர்Ó என்பது வெண்பா
மென்மலர் - நுண்ணிய பொருளுடைமையால் மென்மலல்ர் என்றார். மலர் போன்றதை மலர் என்றார். மலர் - மலர்களாலாகிய மாலைக்கு ஆகுபெயர்; அது போன்ற பாமாலைக்கு உவமையாகுபெயர்; நால்வகைப் பூக்களால் இயன்ற மாலை போல நால்வகைச் சொற்களால் தொகுப்பது பாமாலை; க்ஷேத்திரக் கோவைத் திருப்பதிகம் முதலியவை காண்க.
இன் வெண்பா - இன் - இனிய சொல்லும் பொருளும் உடைய; நேரிசை வெண்பா என்ற யாப்பின் பாகுபாடும் குறித்தது. “இன்மொழி வெண்பாÓ (4049); ழுஇன்றமிழ் வெண்பாÓ (4051).