அவ்வகையா லருள்பெற்றங் கமர்ந்துசில நாள்வைகி இவ்வுலகிற் றம்பெருமான் கோயில்களெல் லாமெய்திச் செவ்வியவன் பொடுபணிந்து திருப்பணியேற் றனசெய்தே யெவ்வுலகும் புகழ்ந்தேத்து மின்றமிழ்வெண் பாமொழிந்தார். | 6 | (இ-ள்) அவ்வகையால்.....வைகி - அந்த வகையினாலே திருவருளினைப் பெற்று அப்பதியில் அமர்ந்து சில நாட்கள் தங்கியருளி; இவ்வுலகில்.......எய்தி - இவ்வுலகத்திலே தம்பெருமானார் வீற்றிருக்கும் கோயில்கள் எல்லாவற்றிலும் சென்று சேர்ந்து; செவ்விய....செய்தே - செம்மையாகிய அன்பினாலே வணங்கி ஏற்றனவாகிய திருப்பணிகளையும் செய்தே; எவ்வுலகும்.....மொழிந்தார் - எல்லாவுலகங்களும் புகழ்ந்து ஏத்துகின்ற இனிய தமிழ் வெண்பாக்களைப் பாடித் துதித்தனர். (வி-ரை) அவ்வகையால் - முன்பாட்டிற் கூறிய அந்த வகையினாலே; “மென்மலர்Ó புனைதலாலே. இவ்வுலகில் - “உலகின்கண்Ó (4049). அங்கு - திருத்தில்லையில். அமர்ந்து - விரும்பியிருந்து; அமர்தல் - விரும்புதல். ஏற்றன - திருப்பணி - செய்தே - என்க. “கடன் ஏற்ற பணி செய்தேÓ - (4049). அரசர் நிலைக்கும் அன்பின் பெருக்குக்கும் ஏற்றவாறு. எவ்வுலகும் புகழ்ந்தேத்தும் - தமிழ் வெண்பா - எவ்வுலகத்தோர்களும் இத்துதிகளைச் சொல்லி இவற்றால் இறைவனை ஏத்தும் என்றும், இவ்வெண்பாக்களையே புகழ்ந்து என்றும் உரைக்க நின்றது; வெண்பாக்களால் ஏத்தும் - வெண்பாக்களை ஏத்தும் என இருவழியும் உரைக்க. தமிழ் - இன் - வெண்பா என்க. மென்மலர் - தொடர்ச்சியாகிய மாலையா யின்றிப் பதிதோறும் ஒவ்வோர் தனி வெண்பாக்களாம் என்பார் மலர் என்றார். |
|
|