இந்நெறியா லரனடியா ரின்பமுற விசைந்தபணி பன்னெடுநா ளாற்றியபின் பரமர்திரு வடிநிழற்கீழ் மன்னுசிவ லோகத்து வழியன்பர் மருங்கணைந்தார் கன்னிமதில் சூழ்காஞ்சிக் காடவரை யடிகளார். | 7 | (இ-ள்) இந்நெறியால்....ஆற்றியபின் - இந்த நெறியினாலே சிவனடியார்கள் இன்பமடையத் தமக்கு இசைந்த பணிகளைப் பல நீண்ட காலமாகச் செய்திருந்தபின்; பரமர்....மருங்கணைந்தார் - இறைவரது திருவடியின கீழே சிவனுலகத்திலே வழிவழி நிற்கும் அன்பர்களுடன் சார அணைந்தனர்; கன்னி...ஐயடிகளார் - வெல்லப்படாத மதில் சூழ்ந்த காஞ்சிபுரத்தில் அரசியற்றிய ஐயடிகள் காடவர்கோன் நாயனார். (வி-ரை) அரனடியார்.....பணி - பதிகள் தோறும் பரமனைப் பணிந்து வெண்பாப் பாடித் திருத்தொண்டு செய்ததனோடு அரன் அடியார்கட் கிசைந்த பணிகளையும், முன்பாட்டில் அரன்பணியும், இப்பாட்டில் அடியார் பணியும் கூறினார். மன்னு சிவலோகம் - மன்னுதல் - அழியாது நிலைபெற்றிருத்தல்; வழிஅன்பர் - சிவநெறியில் வழிவழி வந்த அடியவர்கள். சிவலோகத்துவழி - என்றலுமாம் மருங்கு அணைந்தார் - அன்பர்களுடன் கூடக் கலந்து அணைந்தனர்; “அடியார் நடுவு ளிருக்கும் அருளைப் புரியாய்Ó (திருவா). மருங்கு - அருகில். காஞ்சிக் காடவர் - இவர் காஞ்சிபுரத்தைத் தலை நகராகக்கொண்டு ஆண்டவர்; காடவர் - சோழர்களின் ஒரு குலத்தினர் பெயர்; சோழருட் சில மரபுடையோர் ஆற்காட்டையும் ஆண்டமையால் இப்பெயர் பெற்றனர் என்பர். கன்னி மதில் -அழியாத மதில்; காஞ்சியின் மதில் பழம் பாடல்களிலும் சிறப்பிக்கப்பட்ட பழமையையும் பெருமையையும் உடையது. |
|
|