பாடல் எண் :4054

உளத்திலொரு துளக்கமிலோ முலகுய்ய விருண்டதிருக்
களத்துமுது குன்றர்தரு கனகமாற் றினிலிட்டு
வளத்தின்மலிந் தேழுலகம் வணங்குபெருந் திருவாரூர்க்
குளத்திலெடுத் தார்வினையின் குழிவாய்நின் றெமையெடுத்தார்.
9
(இ-ள்) உலகுய்ய...முதுகுன்றர் தரும் - உலகமுய்யும் பொருட்டு விடமுண்டதனால் இருள் கொண்ட கண்டத்தினையுடைய திருமுதுகுன்ற வாணர் தந்த; கனகம்.......குளத்தில் எடுத்தார் - பொன்னைத் திருமணி முத்தாற்றில் இட்டுப், பின் வளத்தினால் மலிந்து ஏழுலகங்களும் வணங்கும் பெரிய திருவாரூரிற் கமலாலயத் திருக்குளத்தில் எடுத்தவராகிய நம்பிகள்; வினையின்.......எடுத்தார் - வினையாகிய பெருங்குழி வாயினின்றும் என்னைமேல் எடுத்தார்; (ஆதலின்), உளத்தில் ஒரு துளக்கமிலோம் - உள்ளத்தில் ஒரு சிறிதும் நடுக்கமில்லோம்.
(வி-ரை) எனை எடுத்தார் - (ஆதலின்) துளக்கமிலோம் என்று கூட்டுக.
துளக்கம் - நடுக்கம்; “வஞ்சநமன் வாதனைக்கும் வன்பிறவி வேதனைக்கும், அஞ்சி யுனையடைந்தே னையா பராபரமே Ó (தாயுமானார்) என்றபடி பிறவியால் வரும் கேட்டுக்கு அஞ்சியமையால் வருவது நடுக்கம்; வினைக்குழியினின் றெடுக்கப்பட்டமையால் வினை காரணமாக வரும் பிறவி யில்லையாகும். ஆதலின் அதன் பொருட்டு வரும் துளக்கமு மில்லையாயிற்று. நம்பியாரூரர் திருவடிச் சார்ந்தார்க்குப் பிறவியில்லை என்பது கருத்து. சார்ந்தாரைக் காக்கும் தன்மை பற்றி நம்பிகளைப் போற்றியவாறு.,
வினையின் குழி - வினை செய்தாரை ஆழமாகிய பிறவியின் அழுத்துதலால் குழி எனப்பட்டது.
உலகுய்ய இருண்ட - இருண்ட - விடமுண்டமையால் இருள் உடையதாயிற்று; விடமுண்டது தேவர்களுய்தற் பொருட்டு; தேவர்கள் உய்ய உலகம் காவல் பெறுதலின் உய்குய்ய என்றார்; தேவர்களைக் காத்த அடையாளங் கண்டு, பற்றி, வந்தடைந்து உலக முய்யும்படி என்றலுமாம்.
முதுகுன்றர் தரும்.....குளத்தில் எடுத்தார் - திருமுதுகுன்றத்தில் இறைவர் தந்த 12000 பொன்னையும் அங்குத் திருமணி முத்தாற்றில் இட்டு, இங்குத் திருவாரூர்க் குளத்தில் வரப்பெற்றனர் நம்பிகள் என்பது சரிதம். (ஆற்றிலிடுதல் - முன், 3261 - 3264 திருப்பாட்டுக்களிலும், குளத்தில் எடுத்தல், 3281 - 3292 - திருப்பாட்டுக்களிலும், உரைக்கப்பட்டன.) எடுத்தார் - நம்பிகள்; ஆறு - திருமணிமுத்தாறு; குளம் - கமலாலயம்.
ஏழுலகு மருவுபெறும் என்பது பாடமாயின் பிருதுவித் தலமாதலின் ஏழுலகிற்கு மூலமாதலை விளக்கினார் எனப் பொருள் கொள்க என்றனர் முன் உரைகாரர். எல்லா உலகத்துயிர்களும் முத்தி பெற வந்து வணங்கும் என்றலுமாம்.