"தாவாத பெருஞ்செல்வந் தலைநின்ற பயனிது"வென் றோவாத வொளிவிளக்குச் சிவன்கோயி லுள்ளெரித்து நாவாரப் பரவுவார் நல்குரவு வந்தெய்தத் தேவாதி தேவர்பிரான் றிருத்தில்லை சென்றடைந்தார். | 3 | (இ-ள்) தாவாத....என்று - கெடாத பெருஞ்செல்வங்களாற் பெறுஞ் சிறந்த பயன் இதுவேயாம் என்று துணிந்து; ஓவாத....பரவுவார் - நீங்காத ஒளி தரும் திருவிளக்குக்களைச் சிவபெருமான் றிருக்கோயிலினுள்ளே எரித்து நாவாரத் துதிப்பாராகிய இந்நாயனார்; நல்குரவு.....அடைந்தார் - வறுமை வந்து அடையவே, (வறுமையுடன் ஈண்டிருத்தல் தகாதென்று) தேவர்களுக்கெல்லாம் ஆதிதேவனாராகிய இறைவர் எழுந்தருளியுள்ள திருத்தில்லையினைப்போய் அடைந்தனர். (வி-ரை) தாவாத - கெடாத; தலைநிற்றல் - சிறத்தல்; பயன் இது - செல்வம் பெற்றபயன் இதுவேயாம் என்பது; பிரிநிலை ஏகாரம் தொக்கது. "படைத்த நிதிப்பயன் கொள்வார்" (4117), "வந்த செல்வத்தின் வளத்தினால் வரும் பயன் கொள்வார்" (504) என்பன முதலியவை காண்க. ஓவாத - நீங்காத; இடையறாத. நாவார - ஆர்தல் - நிரம்புதல். பரவுவார் - வினைப்பெயர்; பரவுவார் - அடைந்தார் என்று கூட்டுக. நல்குரவு.....அடைந்தார் - "செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே" (தேவா) என்றபடி நல்குரவு எல்லாவற்றையும் நீக்கும் பெருஞ்செல்வ முடையராகிய இறைவர் வெளிப்பட வீற்றிருந்தருளும் இடமாதலின் தில்லைக்குச் சென்றடைந்தார் என்பது குறிப்பு. |
|
|