தில்லைநகர் மணிமன்று ளாடுகின்ற சேவடிகள் அல்கியவன் புடனிறைஞ்சி யமர்கின்றார் புரமெரித்த வில்லியார் திருப்புலீச் சரத்தின்கண் விளக்கெரிக்க இல்லிடையுள் ளனமாறி யெரித்துவரு மந்நாளில், | 4 | (இ-ள்) தில்லைநகர்....அமர்கின்றார் - திருத்தில்லை நகரத்தில் அழகிய திருவம்பலத்திலே ஆடுகின்ற திருவடிகளினிடத்தே தங்கிய அன்போடும் வணங்கி அங்கு விரும்பியிருக்கின்றாராகிய நாயனார்; புரமெரித்த....எரிக்க - முப்புரங்களையும் எரித்த வில்லை ஏந்திய இறைவரது திருப்புலீச்சரம் என்னும் திருக்கோயிலில் விளக்கு எரிக்கும் திருப்பணி செய்வதற்கு; இல்லிடை...அந்நாளில் - தமது மனையில் உள்ளனவாகிய சங்கமப் பொருள்களை விற்று எரித்து வருகின்ற அந்நாளில், (வி-ரை) அல்கிய - தங்கிய; அல்கல் - தங்குதல்; சிவன்பணி செய்வோர் வறுமை வந்தபோது அன்பு குறைந்து வெறுப்பும் அடைவது உலகியல்பு பெருஞ் செல்வராயிருந்த இந் நாயனார்க்கு வறுமை வந்து வேற்றிடம் புக நேர்ந்தபோது அன்பு பெருகிற்று; இஃது உலகியலின் மேம்பட்ட இறைபாலின் அன்புநிலை. திருப்புலீச்சரம் - "திருப்புலீச்சுரத்து முன்னர்" (396) என்றதும், ஆண்டுரைத்த தல வரலாறும் பார்க்க. (I பக்கம் 482); இறைவர் கோயிலில் விளக்கெரிக்கும் பணி செய்யும் நியமமுடைய இந்நாயனார் அந்நியமமுடித்தற்குத் தில்லையம்பதியில் உள்ள கோயில்கள் பலவற்றுள்ளும் திருப்புலீச்சரத் திருக்கோயிலைத் தேர்ந்து எடுத்து அங்கு அப்பணியினைச் செய்தனர் என்க. இல்லிடை உள்ளன மாறி - வறுமையால் தமது ஊரினின்றும் போதுவார் அங்கு எஞ்சிய சில பொருள்களைத் தம் சீவனத்துக்காக உடன் கொண்டு போந்தனராக, அப் பொருள்களையும் விற்று; மாறி - விற்று; பண்டமாற்றாக விற்றலுமாம். இல்லிடை உள்ளன - முரண் அணிச்சுவைபடக் கூறியது கவிநயம்; இன்மையின் கண்ணும் உள்ள சிலவற்றை என்பதுமாம். வறுமையிற் செம்மை. எரித்து - விளக்கெரித்து. |
|
|