இவ்வகையாற் றிருந்துவிளக் கெரித்துவர வங்கொருநாண் மெய்வருந்தி யரிந்தெடுத்துக் கொடுவந்து விற்கும்புல் எவ்விடத்தும் விலைபோகா தொழியவுமிப் பணியொழியார் அவ்வரிபுல் லினைமாட்டி யணிவிளக்கா யிடவெரிப்பார், | 6 | (இ-ள்) இவ்வகையால்....எரித்துவர - முன்கூறிய இவ்வாறு திருந்துவதற்கேதுவாகிய விளக்கினை எரித்துவர; அங்கு....ஒழியார் - அவ்விடத்து ஒருநாளில் உடல் வருந்தி அரிந்து எடுத்துக் கொண்டு வந்து விற்கும் புல் எவ்விடத்திலும் விலைபோகாமல் ஒழியக்கண்டும் இந்த விளக்குத் திருப்பணியினைக் கைவிடாதவராய்; அவ்வரி...எரிப்பார் - அரிந்த அந்தப் புல்லினையே தீமாட்டி அழகிய விளக்காக எரிப்பாராய், (வி-ரை) இவ்வகையால் - முன்பாட்டிற் கூறியவாறு இந்தவகையால்; முன்னர்ப் பொருட்சார்பின் துணையால் இல்லிடையுள்ளனமாறி விளக்கு எரித்த செயலை ஆயசெயல் (4059) என்று சேய்மைச் சுட்டினாற் கூறிய ஆசிரியர், அதனினும் அணித்தாகிய உடற்சார்பாகிய மெய்ம்முயற்சியாற் பொருள்கொண்டு செய்ததனை இவ்வகையால் என அணிமைச் சுட்டினாற் கூறியது கவிநயமும் மெய்ப்பொருணயமுமாம்; முன்கூறிய அதனில் வேறுபட்ட இந்த என்ற குறிப்புமாம். திருந்து - திருந்தும்; திருத்துதற் கேதுவாகிய எனப் பிறவினைப் பொருள் கொள்க. எவ்விடத்தும் - விலைக்குக் கொள்கின்ற எல்லாவிடத்திலும்; உம்மை முற்றும்மை. ஒழியவும் - உம்மை உயர்வு சிறப்பு. ஒழியவும் இப்பணி ஒழியார் - பொருள் வரும் வழி எல்லா மொழிந்தாலும் பணியினை விடாது செய்தல் அன்பின் உறைப்பினாலன்றி யாகாது. ஒழியார் - ஒழியாராகி; முற்றெச்சம். மாட்டி - ஒழுங்குபடுத்தித் தீ மூட்டி; அணிவிளக்காயிட - அழகிய விளக்குப் போலவே எரிய; ஆதல் - உவம உருபு. |
|
|