பாடல் எண் :4061

முன்புதிரு விளக்கெரிப்பார் முறையாமங் குறையாமல்
மென்புல்லு விளக்கெரிக்கப் போதாமை மெய்யான
அன்புபுரி வாரடுத்த விளக்குத்தந் திருமுடியை
என்புருக மடுத்தெரித்தா ரிருவினையின் றொடக்கெரித்தார்.
7
(இ-ள்) முன்பு....போதாமை - இறைவரது திருமுன்பு விளக்கு எரிக்கும் முறைப்படி உள்ளயாமம் என்னும் கால அளவிற் குறையாமல் விளக்கெரிப்பதற்கு அந்தப் புல்லுப் போதாமையினாலே; மெய்யான அன்பு புரிவார் - மெய்ம்மையன்பினாலே திருத்தொண்டு செய்வாராகிய நாயனார்; அடுத்த....மடுத்தெரித்தார் - அடுத்த விளக்காகத் தமது திருமுடியினையே எலும்பும் கரைந்துருகும்படித் தீ மூட்டி எரித்தனர்; இருவினையின் தொடக்கு எரித்தார் - இருவினைகளாகிய பாசத்தொடக்கினை எரித்தாராயினர்.
(வி-ரை) முன்பு - இறைவரது திருமுன்பு; விளக்கு எரிக்கும் முறை யாமம் - இத்தனை யாமம் விளக்கெரிப்பேன் என்று நியமமாக மேற்கொண்ட காலவளவாகிய யாமத்தின் எல்லைவரை; யாமம் - 3? நாழிகை கொண்ட கால அளவு.
போதாமை - போதாமையால் என மூன்றனுருபு விரிக்க.
மெய்யான அன்பு புரிவார் - மெய்யான - என்றும் பொய்படாத; அன்பு - அன்பின் செயல்.
அடுத்த விளக்கு - கணம் புல்லும் போதாது விளக்கு மாளும் நிலையில் அதற்கு அடுத்த விளக்காக; அடுத்த - பொருந்திய என்றலுமாம். நெய் விளக்கு இல்லாதபோது அடுத்தது புல் விளக்கு; அது தீர்ந்தபோது அடுத்தது முடிவிளக்கு என்னும்படி. வினைக்கு - என்பதும் பாடம்.
திருமுடி - தலையில் விதிப்படி வைத்திருந்த குஞ்சி; இந்நாளிற் முடியினைக் கத்தரித்தல் போலன்றி முன்னாளில் ஆண் மக்கள் குஞ்சிமயிர் வைத்து வளர்த்திடுதல் மரபு.
என்புருக - எலும்பும் உருகும் அன்பு மேலீட்டினால்; பேரன்பு காரணமாக; மடுத்தல் - தீ மூட்டுதல்
. இருவினையின் தொடக்கு எரித்தார் - இருவினைப் போகமாக வருவது உடம்பெடுத்தலாகிய பிறவி; இங்கு முடிவிளக்கெரித்த செயல் விளக்கெரித்த அதனோடமையாது, இவரது இருவினைப் பாசத்தொடர்பை எரித்த செயலேயாகவும் பயன் தந்துமேற் பிறவியில்லாமற் செய்தது; தொடக்கு - தொடர்பு - கட்டு - என்ற கருத்துமது; வினைத் தொடக்கறுத்த நிலை மேல்வரும் பாட்டிற் கூறப்படுதல் காண்க.