அங்கவர்தா மகிழும்வகை யடுத்தவுரை நயமாக்கிக் கொங்கலர்தார் மன்னவர்பாற் பெற்றநிதிக் குவைகொண் டு வெங்கணரா வொடுகிடந்து விளங்குமிளம் பிறைச்சென்னிச் சங்கரனா ரினிதமருந் தானங்கள் பலசமைத்தார். | 2 | (இ-ள்) அங்கவர்தாம்.....நயமாக்கி - அங்கு அம்மன்னவர்கள் மகிழும் வகையாலே பொருளுக்கேற்ற சொற்களை நயம்பெறச் செய்து; கொங்கலர்......கொண்டு - மணம் விரிகின்ற பூமாலை யணிந்த அரசர்களிடம் பெற்ற செல்வக் குவியல் களைக் கொண்டு; வெங்கண்.....சமைத்தார் - வெவ்விய கண்ணையுடைய பாம்புடனே கிடந்தும் விளங்குகின்ற இளம்பிறையினையணிந்த சென்னியையுடைய சங்கரனார் இனிதாக வீற்றிருந்தருளும் கோயில்கள் பலவற்றை அமைத்தனர். (வி-ரை) அடுத்த உரை- மேற்கொண்ட பொருளுக் கேற்றபடி அடுத்த சொல்; உரை நயம் - சொன்னயம். வெங்கண் அரா - வெம்மை - கொடுமை செய்யும்; பார்வையாலே விடத்தன்மை செய்யும் பாம்புகளும் உள; திருஷ்டிவிஷம் என்பது வடிமொழி. அராவொடு கிடந்து விளங்கும் இளம்பிறை - கிடந்தும் என்று உயர்வு சிறப்பும்மை தொக்கது; அராவுடன் கிடந்தால் வாடுதல் மதியின் தன்மை; அவ்வாறு கிடந்தும் விளக்க முறுதல் சிவனருள் வலிமை என்பது குறிப்பு. இனிதமரும் தாளங்கள் - விளங்க வீற்றிருக்கும் கோயில்கள்; சமைத்தல் - உள வாக்குதல். |
|
|