யாவர்க்கு மனமுவக்கு மின்பமொழிப் பயனியம்பித் தேவர்க்கு முதற்றேவர் சீரடியா ரெல்லார்க்கும் மேவுற்ற விருநிதிய மிகவளித்து விடையவர்தங் காவுற்ற திருக்கயிலை மறவாத கருத்தினராய். | 3 | (இ-ள்) யாவர்க்கும்.....இயம்பி - யாவருக்கும் மனமகிழும்படி யாகிய இன்பம் தரும் சொற் பயன்களையே சொல்லி; தேவர்க்கு......மிக அளித்து - தேவர்க்கெல்லாம் பெருந்தேவராகிய சிவபெருமானது சிறப்புடைய அடியார்கள் எல்லாருக்கும் பொருந்திய பெருநிதியங்களை மிகவும் அளித்து; விடையவர்தம்.....கருத்தினராய் - இடபத்தினை உடைய இறையவரது சோலைகள் பொருந்திய திருக்கயிலாயத்தினை எப்போதும் மறவாத கருத்துடையவராகி, (வி-ரை) இன்பமொழிப் பயனியம்புதலாவது- இன் மொழியினையே எல்லாரும் மகிழ்வர்; அந்த இன்ப மொழிதானும் இறைவர் புகழ்கூறப் பெறின் அதன் பயனைப் பெறும்; என்ற உண்மையின்படி உலகினருக்குச் சொல்லுதல். தேவர்க்கு முதற்றேவர்- சிவபெருமான்; முதல் - முதல்வர்; சங்காரகாரணனாகிய முதல்வன் சிவன் என்ற கருத்து. விடையவர்தம் - திருக்கயிலை என்று கூட்டுக. விடையவர்தம் காவுற்ற- செலுத்துகின்ற இடபவாகனத்தையுடைய சிவனார்; கா- சுமத்தல் - செலுத்துதல்; என்றலுமாம். நந்தி தேவரது காவல் பொருந்திய என்றலுமாம். காவுற்ற - சோலைகள் சூழ்ந்த; கா - சோலை; விடையவர்தாம் காவுற்ற என்பது பாடமாயின் சிவபெருமான் அடியாரைக் காத்தற்றொழில் செய்யும் என்க. கா - காத்தல் . |
|
|