வேரியார் மலர்க்கொன்றை வேணியா ரடிபேணுங் காரியார் கழல்வணங்கி யவரளித்த கருணையினால் வாரியார் மதயானை வழுதியர்தம் மதிமரபிற் சீரியார் நெடுமாறர் திருத்தொண்டு செப்புவாம். | 5 | (இ-ள்) வேரியார்....கருணையினால் - தேன் பொருந்திய மலராகிய கொன்றையை அணிந்த சடையினை உடைய இறைவரது திருவடியைப் பேணுகின்ற காரி நாயனாரது கழல்களை வணங்கி; அவர் அளித்த கருணையினால் - அவர் செய்த கருணைத் திறத்தின் துணையினாலே; வாரி ஆர்.......நெடுமாறர் - கடல்போல நிறைந்து வழிகின்ற மதம் பொருந்திய யானைப் படையினையுடைய பாண்டியர்களுக்குரிய சத்திரவமிசத்திலே நின்றசீர்நெடுமாற நாயனாரது; திருத்தொண்டு செப்புவாம் - திருத்தொண்டினைச் சொல்வோம். (வி-ரை) இஃது இச்சரித முடிப்பும் வருஞ்சரிதத் தோற்றுவாயுமாம். இது கவிக்கூற்று. இப்பாட்டுத் திரிபு என்னும் சொல்லணி. வேரி - மணமுமாம். பேணுதல் - விரும்பி வழிபடுதல்; ஆர்தல்- நிறைதல். மதயானை - இச்சரிதத்துள் வரும் போர்க் குறிப்பு. கருணையினால் - கருணையின் துணையினால். வாரி - கடல் - இங்குக் கடலின் தன்மையாகிய நிறைவு குறித்தது; ஆர்தல் - பொருந்துதல்; வாரி - ஆர் - கடல்போல நிறைந்த. வழுதியர் தம் மதிமரபு - பாண்டியர்க்குரிய சந்திரவமிசம்; பாண்டியர் சந்திர மரபினர்; (சோழர் சூரிய மரபினர்); சீரியார் - நின்ற சீருடையார். |
|
|