எடுத்துடன்ற முனைஞாட்பி னிருபடையிற் பொருபடைஞர் படுத்தநெடுங் கரித்துணியும் பாய்மாவி னறுகுறையும் அடுத்தமர்செய் வயவர்கருந் தலைமலையு மலைசெந்நீர் மடுத்தகடல் மீளவுந்தாம் வடிவேல்வாங் கிடப்பெருக, | 4 | (இ-ள்) எடுத்து.....ஞாட்பின் - படையெடுத்துப் பொருத போர்க் களத்திலே; இருபடையில்...மடுத்தகடல் - இருபக்கத்துச் சேனை வீரர்களும் வீழ்த்திய நீண்ட யானைகளின் உடற்றுண்டங்களும் குதிரைகளினுடல்கள் அறுபட்ட துண்டங்களும் எதிர்த்துப் போர்செய்யும் சேனை வீரர்களின் கரிய தலைமலையும் ஆகிய இவற்றின் வரும் குருதியின் பெருக்கினைக் கலக்கப்பெற்ற கடலானது; மீளவும்.....பெருக - முன்னே உக்கிரகுமார பாண்டியர் கடல் சுவர வேல் வாங்கியதுபோல மீண்டும் இவர் வேல்வாங்கும்படி பெருக. (வி-ரை) எடுத்து - படையெடுத்து; உடன்ற - மாறுபட்ட; பொருத; முனைஞாட்பு - போர்க்களம். இருபெயரொட்டு; படுத்த - வெட்டி வீழ்த்திய, கொன்ற; துணி - துண்டங்கள். அறுகுறை- அறுபட்ட குறை உடல்கள் பாய்மா - குதிரை; கருந்தலை மலை - மலைபோலக் குவிக்கப்பட்ட வீரர்களின் கரியதலைகள்; தலைக்குவியல் பற்றிச் புகழ்ச்சோழநாயனார் புராணவரலாறு பார்க்க. செந்நீர்....பெருக - இரத்த ஆறுபாய்ந்து கடல் பெருகிற்று; அது பெருகிய செயல் முன் உக்கிரகுமார பாண்டியர், பெருகிவந்த கடல்சுவற வேல்வாங்கியது போல மீளவும் இவர்வேல், செந்நீர் - (இரத்தம்) வாங்கும்படி பெருகியது போன்றதென்பதாம். மீளவும் - முன் அவர் யெய்த அது போல மீண்டும் இவர் வாங்கிட என்று உம்மை இறந்தது தழுவிய எச்சவும்மை. மேற்பாட்டில் வல்லியும் என்ற இடத்தும் இவ்வாறே கொள்க. வாங்கிட - வலித்து எறிந்திட. அவர் செந்நீர் - என்பதும் பாடம். |
|
|