வயப்பரியின் களிப்பொலியு மறவர்படைக் கலவொலியுங் கயப்பொருப்பின் முழக்கொலியுங் கலந்தெழுபல் வியவொலியும் வியக்குமுகக் கடைநாளின் மேகமுழக் கெனமூளச் சயத்தொடர்வல் லியுமின்று தாம் விடுக்கும் படிதயங்க, | 5 | (இ-ள்) வயப்பரியின்.......பல்லிய ஒலியும் - வெற்றி பெற்ற குதிரைகளின் களிப்பால் உண்டாகும் ஒலியும் வீரர்களின் ஆயுதங்களின் ஒலியும், யானைகளாகிய மலைகளின் பிளிற்றின் முழக்க ஒலியும், பலவும் கூடி எழுந்து ஒலிக்கும் பல இடங்களின் ஒலியும்; வியக்கும்......முழக்கென - அதிசயிக்கும் ஊழி முடிவு காலத்தில் பெருகும் மேகங்களின் முழக்கமோ என்று சிந்தித்து; மீள......தயங்க - முன்போல (உக்கிரகுமாரர் விட்டது போல்) வீரத் தொடர்பினை உடைய விலங்கினையும் மீட்டும் இன்று தாம் விடுக்கும்படி ஒலிக்க; (வி-ரை) படைக்கல ஒலி - படைக்கலங்களைச் சுழற்றுதல் வீசுதல் எறிதல் மோதுதல் இவற்றால் எழும் ஒலி; வயம் - வெற்றி. கயப் பொருப்பு - பொருப்பு - மலை; மலை போன்ற யானை; கயம் - யானை; முழக்கு- பிளிற்றொலி; பல்லியம் - இவை போரில் வீரர்களுக்கு ஊக்கம் தர முழக்கப்படுவன, வெற்றிச் சங்கு, முழவு, முதலியனவுமாம். முருக்கும் - உடல் - வெட்டுண்ட உடல்களில்; ஒலி - இவை ஒவ்வோர் பொருள் குறிப்பன ஆதலின் ஒலி என்றார். உகக்கடை நாளின் மேக முழக்கு என - உகக்கடை நாள் - நீரூழி; முன்கூறிய பலவகைப் பேரொலிகளும் கூடுதலின் பெருமுழக்காயின என்பார் வாளா மேக மென்னாது உகக்கடை நாளின் மேகம் என அடைகொடுத் தோதினார். முன் உக்கிரகுமார பாண்டியர் வரலாற்றிற் போந்த பெரு மேகக்கூட்டங்களின் குறிப்புமாம். மீள - மீளவும்; இறந்தது தழுவிய எச்சவும்மை விரிக்க. சயத் தொடர் வல்லியினையும் - விடுக்கும்படி - சயத் தொடர்வல்லி - வெற்றியினால் பகைவரைப் பிணிக்கும் விலங்கு. விடுத்தல் - ஏவுதல்; வல்லியினையும் - என இரண்டனுருபும் சாரியையும் விரிக்க; தொடர் - பிணிப்படுக்கும் எனப் பிற வினைப் பொருளில் வந்தது. தயங்குதல் - விளங்குதல். எனமூள - என்பதும் பாடம். |
|
|