தீயுமிழும் படைவழக்குஞ் செருக்களத்து முருக்குமுடல் தோயுநெடுங் குருதிமடுக் குளித்துநிணந் துய்த்தாடிப் போயபரு வம்பணிகொள் பூதங்க ளேயன்றிப் பேயுமரும் பணிசெய்ய வுணவளித்த தெனப்பிறங்க, | 6 | (இ-ள்) தீ உமிழும்...செருக்களத்து - தீயைச் சிந்துகின்ற படைகளை வீசியும் எறிந்தும் போர்புரியும் போர்க்களத்தில்; முருக்கும் உடல்...ஆடி - வெட்டுண்ட உடல்கள் தோய்ந்து கிடக்கும் குருதி நிறைந்த மடுவிற் குளித்து நிணங்களை உண்டு கூத்தாடி; போய....அன்றி - முன்னாளில் பணிகொண்ட பூதங்களேயல்லாமல்; பேயும்.....பிறங்க - பேயும் உரிய அரிய பணி செய்யும்படி அவற்றுக்கு உணவு அளித்ததாகும் என்று சொல்லும்படி விளங்க; (வி-ரை) தீ- படைகள் மோதுதலால் தீப்பொறி பறக்கும் என்பது; தீ உமிழும் - தீப்போன்று ஒளிவிளங்கும் என்றுமாம். படைவழங்குதல் - படைகளை ஏவிப் போர்புரிதல். முருக்கும் - வெட்டப்பட்ட; உடல்தோயும் நெடுங்குருதி - குறை உடல்கள் அங்கு வடிந்து நின்ற இரத்தப்பெரு மடுவில் தோய்ந்துகிடந்தன என்பது. Body lay in a pool of blood என்பர் நவீனர். குருதி மடுக்குளித்து - இரத்தமாகிய மடுவிற் குளித்து. நிணம் துய்த்து - நிணத்தினை உண்டு; நிணம் - இறைச்சி; ஆடி - கூத்தாடி; இவை போர்க்களத்திற் கூடும் பேய்களின் செயல்களாகக் கூறப்படுவன, “சூர் முத றடிந்த சுடரிலை நெடுவேல்.....துணங்கை தூங்கÓ என்ற திருமுருகாற்றுப் படைப்பகுதியும், பரணி நூல்களில் பேய் - காளி - பூதம் முதலியவற்றைப்பற்றி உரைப்பனவும் இங்குக் கருதத்தக்கன. போயபருவம் - முன்காலத்தில்; பணிகொள் பூதங்களேயன்றி - நெல்வேலிப் போரில் வடபுலமன்னரின் விறலினை நோக்கிப் பாண்டியன் சிவனை நினைய, நெல்லையப்பர் ஏவலினால் சிவபூதகணங்கள் வந்து பகைவரை அழித்தன என்பது தலபுராண வரலாறு. உணவு அளித்த தென - பேய் பூதங்களுக்கு விருந்து அளித்தது என்று சொல்லும்படி. பிறங்குதல்- விளங்குதல். |
|
|