இனையகடுஞ் சமர்விளைய விகலுழந்த பறந்தலையிற் பனைநெடுங்கை மதயானைப் பஞ்சவனார் படைக்குடைந்து் முனையழிந்த வடிபுலத்து முதன்மன்னர் படைசரியப் புனையுநறுந் தொடைவாகை பூழியர்வேம் புடன்புனைந்து, | 7 | (இ-ள்) இனைய.....பறந்தலையில் - இத்தன்மைத்தாகிய கொடிய போர் மூளும்படி பொருத போர்க்களத்தில்; பனை....சரிய - பனைபோல நீண்ட துதிக்கையினைப் பொருந்திய மதயானைச் சேனையினையுடைய பாண்டியனாரது சேனைகளுக்குத் தோற்றுப் போரிலழிந்த முதன்மை பொருந்திய வடபுலத்தரசனுடைய சேனைகள்சிதைந்து ஓடிப்போக; புனையும்...புனைந்து - வெற்றித்துறையிற் புனையப்படுகின்ற மணமுடைய வாகைமாலையினைப் பாண்டியருக்குரிய வேப்பமாலையுடனே தரித்து; (வி-ரை) நெடுஞ்சமர் - கொடுமையாலும் காலத்தாலும் நீண்ட போர். பனைநெடுங்கை மதயானை- 'பனைக்கை மும்மத வேழம்’ (அரசு - தேவா) இகலுழந்த - போர்புரிந்த; பறந்தலை - போர்க்களம். பஞ்சவனார் - பாண்டியரது; ஆறனுருபு விரிக்க. முனை அழித்த - போரில் தோற்ற; முதன் மன்னர் - முதன்மை பெற்ற அரசர்; முதன்மையாவது படை வீரம் முதலியவற்றால் மேம்படுதல்; சரிதல் - அழிந்து சிதைதல்; இறத்தல்; முதன்மன்னர் - முதன் மன்னராயிருந்தும் அவர் படை சரிய என்று இழிவு சிறப்பும்மை விரிக்க. புனையும் நறும்தொடை வாகை - புனையும் - வெற்றி பெற்றோர் புனைதற்குரிய வாகைத்தொடை என்க. வாகை மாலை சூடுதல் வெற்றிக்குறி; வாகை - வெற்றிமாலை. பூழியர் வேம்பு - வேப்பமாலை பாண்டியர்க்குரியது பூழியர் - பாண்டியர். |
|
|