சொல்வி ளங்குசீர்த் தொண்டைநன் னாட்டிடை மல்ல னீடிய வாய்மை வளம்பதி பல்பெ ருங்குடி நீடு பரம்பரைச் செல்வ மல்கு திருமயி லாபுரி. | 1 | (இ-ள்) சொல்....பதி - நூல்களில் எடுத்துச் சொல்லும் புகழ்ச் சொற்கள் விளங்கும் சிறப்புடைய தொண்டை நன்னாட்டிலே வளப்பம் மிகுந்த, வாய்மையினாற் சிறந்த வளத்தையுடைய பதியாகும்; பல்..திரு மயிலாபுரி - பல பெருங்குடிகளும் நீடுகின்ற வழிவழி தொடர்ந்து வரும் செல்வம் நிறைந்த திருமயிலாபுரியாகும். (வி-ரை) சொல் விளங்குசீர் - இது பற்றி முன்னர்த் திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்தும், பிறாண்டு முரைத்தவை பார்க்க. சொல் - நூல்; சொல் - புகழ் என்றலுமாம். மல்லல்.....வாய்மைவளம் - மல்லல் - செல்வச் செழிப்பு; வாய்மைவளம் - ஒழுக்கமேம்பாடு; பெருங்குடி நீடுதல் - பல பெருங்குடி மக்கள் பலவகையினரும் பெருகுதல்; இது நகரச் சிறப்பு. பரம்பரை - என்பதனைக் குடி என்பதனுடனும், செல்வம் என்பதனுடனும் சேர்த்துரைக்க; இடையில் வைத்தது கவிநயம்; பரம்பரை - வழிவழி வரும் தொடர்பு; வழிவழி வரும் செல்வம் அமைதியுடன் சிறந்து நல்வழிப் படுதலும், புதிதின் வருதல், பெரும்பான்மை, அவ்வாறின்றிப் பற்பல கேடுகளுக்குக் காரணமாதலும் உலகியலில் காணப்படும் உண்மையாதல் குறித்தது. |
|
|