பாடல் எண் :4080

நீடு வேலைதன் பானிதி வைத்திடத்
தேடு மப்பெருஞ் சேமவைப் பாமென
ஆடு பூங்கொடி மாளிகை யப்பதி
மாடு தள்ளு மரக்கலச் செப்பினால்.
2
(இ-ள்) நீடு வேலை - பெரியகடல்; தன்பால்...சேமவைப்பாமென - தன்னிட முள்ள மணி முதலிய நிதிகளை வைத்திடுதற்குத் தேடிப் பெற்றதொரு பெரிய பண்டாரம் இது என்று சொல்லும்படி; ஆடு...செப்பினால் - ஆடுகின்ற அழகிய கொடிகளையுடைய அப்பதியின் பக்கங்களில் மரக்கலங்களாகிய சிமிழினால் தள்ளும்.
(வி-ரை) வேலை - தள்ளும் என்று இயைக்க. தேடும் - தேடிய; தன்பால் நிதி - வைத்திடச் - சேமவைப்பாம் என - தன்னிடமுள்ள நிதிக் குவைகளை எல்லாம் சேர்த்துக் காவல் பொருந்தச் சேமித்து வைக்கும் இடம் இதுவேயென்று, கடல், தேடி இதனிடத்துத் தள்ளும் என்பது தற்குறிப்பேற்ற அணி; கடல் படு பண்டங்கள் வாணிபத்துறையில் இங்கு மிக்கிருந்தன என்பதாம்; மயிலை நகர்ச் சிறப்பு முன் ஆளுடைய பிள்ளையார் புராணத்தினுள்ளும், திருக்குறிப்புத்தொண்ட நாயனார் புராணத்துள்ளும், உரைத்தவை பார்க்க.
வேலை தன்பால் நிதி - பவளம் முத்து முதலிய மணிகளும் சங்கு முதலியவைகளும் முதலாகக் கடல்படு நிதியங்கள். தன்பால் - தன்பாலின் உள்ள; சேமவைப்பு - பண்டாரம். பொக்கிசம் என்பர். சேமவைப்பு - இரு பெயரொட்டுப் பண்புத் தொகை.
செப்பு - சிமிழ்; மணிகளைச் சிமிழில் வைக்கும் இயல்பு கருதி அவற்றைக் கொணரும் மரக்கலங்களைச் செப்பு என்று உருவகித்தார்.
மாடுதள்ளும் - தள்ளும் என்ற இலேசினால் செல்வச் செழிப்பும், மரக்கலங்களினின்றும் பண்டங்களைத் தள்ளி எடுக்கும் இயல்பும் குறிக்கப்பட்டன. மாளிகைமாடு - கடற்கரையின் மாளிகைகள் கலப்பண்டங்களை நேரே தள்ளக் கொள்ளும் தன்மையி்ல் அமைந்துள்ளன என்பது குறிப்பு; (docks - yards); “மரக்கல மனைப்படப் பணைக்கரை நிரைக்கும்Ó (1932) என்றதும், ஆண்டுரைத்தவையும் பார்க்க.