பாடல் எண் :4081

கலஞ்சொ ரிந்த கரிக்கருங் கன்றுமுத்
தலம்பு முந்நீர் படிந்தணை மேகமு
நலங்கொள் மேதிநன் னாகுந் தெரிக்கொணா
சிலம்பு தெண்டிரைக் கானலின் சேணெலாம்.
3
(இ-ள்) சிலம்பு....சேணெலாம் - ஒலி்க்கின்ற தெளிந்த அலைகளையுடைய கடற்கரைக்கானலில் பரந்த நில முற்றும்; கலம்...கன்றும் - (அயல் நாடுகளி னின்றும் கொணர்ந்து) மரக்கலங்கள் இறக்கிய யானைக்கன்றுகளும்; முத்து.....மேகமும் - முத்துக்களைக் கொழித்து ஒதுக்கும் கடலிற் படிந்து அணைகின்ற மேகங்களும்; நலம் கொள்....நாகும் - செழிப்புடைய எருமைக்கன்றுகளும்; தெரிக்கொணா - நிற ஒப்புமையினால் வேறுபிரித் தறியக் கூடாவாம்.
(வி-ரை) கலம்..கரிக்கருங்கன்று - மலைநாடு முதலாகிய அயல்நாடுகளினின்றும் யானைக்கன்றுகள் கப்பல் வாணிக முகத்தாற் கொண்டுவரப் படுகின்றன என்னும் செல்வச் செழுமையுணர்த்துதல் இப்பாட்டின் கருத்து. “வேழ முடைத்து மலைநாடுÓ
முத்தலம்பு முந்நீர் - முத்துக்களைக் கரையிற் கொழிக்கும் கடல்; முந்நீர் - கடல்; ஆக்கல் - அளித்தல் - அழித்தல் என்ற முத்தொழிலும் செய்தலாற் போந்த காரணப் பெயர் என்பர்.
முத்தலம்பு......மேகம் - சிப்பிகளின் அகட்டில் மேக நீர்த்துளி வீழ்ந்தவையே முத்தாய் விளையும் என்பதொரு மரபு; அவ்வாறு தம்மாலாக்கப்பட்ட முத்துக்களைக்கடலானது கரையிற் கொழிக்கத் அத் தொடர்புபற்றி அவற்றின் மீது படியும் மேகம் என்றதொரு குறிப்பும் காண்க.
நலம் - வண்ணமும் செழுமையும் முதலிய தன்மைகள். மேதி - எருமை; நாகு - ஒரு சார் விலங்குகளின் இளமைப் பெண்பாற் பெயர். “நாகும்...பெண்ணேÓ என்பது இலக்கணம். (தொல். பொருள் - மரபு - 3). “பான்மறை நாகு கறப்பனபாலாவும்Ó (936).
தெரிக்கொணா - வேறுபாடு பகுத்துத் தெரிக்க இயலா; தெரிக்க ஒண்ணா என்பது ஈற்றகரங்கெட்டது;
திரைக்கானல் - அலைகள் வீசியெறியும் கடற்கரைக்கானல். சேணெலாம் - நெடுந்தூரம் அகன்ற இடமெல்லாம்.
மேதி - மருதக்கரு - திணை மயக்கத்தால் இந்நிலத்தில் வந்தன என்க.