பாடல் எண் :4082

தவள மாளிகைச் சாலை மருங்கிறைத்
துவள்ப தாகை நழைத்தணை தூமதி
பவள வாய்மட வார்முகம் பார்த்தஞ்சி
உவள கஞ்சேர்ந் தொதுங்குவ தொக்குமால.
4
(இ-ள்) தவள.....மருங்கு - வெண்ணிற முடைய மாளிகைகளையுடைய சாலைகளின் பக்கத்தில்; இறை...தூமதி - இறப்புக்களில் அசைகின்ற கொடிகளின் வரிசையுள் நுழைந்து அணைகின்ற தூய வெள்ளியமதி; பவள....அஞ்சி - பவளம் போன்ற வாயினையுடைய பெண்களின் முகங்களைப் பார்த்துப் பயந்து; உவளகம்.......ஒக்குமால் - மறைவிடத்தினைச் சேர்ந்து ஒதுங்குவது போலும். ஆல் - அசை.
(வி-ரை) உயர்வாகிய மாடங்களின் மேல் தூக்கிய கொடி வரிசைகளுள் நுழைந்து வருவதுபோல எழுகின்ற மதி, அச்சத்தால் மறைந்து ஒதுங்குவது போன்றது என்பது. தற்குறிப்பேற்றம். நீண்ட சோலைகளினூடும் மேகவரிசைகளினூடும் உயர்ந்த கோபுரங்களின் கொடி வரிசைகளினூடும் முழுமதி வரும்போது அதினின்றும் மறைந்தும் வெளிப்பட்டும் விட்டிமைக்கும் ஒளியானது இவ்வாறு காணப்படுவது உண்மை இயல்பு; இறை - வீட்டிறப்புக்கள். இறை - தங்குதல் என்று கொண்டு பக்களில் தங்குதலையுடைய என்றலுமாம்; “புள் ளிறைகூரும்Ó (அகநா); இறை கூறும் - தங்குதல்.
மதி...மடவார் முகம்பார்த்து அஞ்சி - நாம் ஒருமதி; இங்கு நம்போன்ற பல மதிகள் காணப்படுகின்றன என்பதும், இவர்களின் முகத்தின் அழகுக்கு நாம் ஒப்பாகோம் என்பதும் அச்சத்துக்குக் காரணம்; “தேமல ரளகஞ் சூழஞ் சிலமதி தெருவு சூழும்Ó (553). மதி - நிறைமதி;
உவளகம் - மறைவிடம். காவற்சாலை என்றலுமாம்;
பவளவாய் - நம்மிடத்துள்ளது கருமையுடைய முயற்கறை; இவர் முகத்துள்ளது செவ்விய வாய் என்றதும் அச்சத்துக்குக் காரணமாக உள்ள குறிப்பு. ஈண்டு வாய் - உதடு;
மருங்குறை - என்பதும் மாடம்.