வீதி யெங்கும் விழாவணி காளையர் தூதி யங்குஞ் சுரும்பணி தோகையர் ஓதி யெங்கு மொழியா வணிநிதி பூதி யெங்கும் புனைமணி மாடங்கள். | 5 | (இ-ள்) வீதி எங்கும் விழா அணி - வீதிகளில் எவ்விடத்தும் திருவிழாக்களின் அலங்காரங்களாம்; காளையர் தூதியங்கும்...ஓதி யெங்கும் - காளையர்களின் தூதாக இயங்குவனபோல உள்ள வண்டுகள் பெண்களின் கூந்தல்களிலெங்கும் ஆம்; பூதி....மாடங்கள் - சுண்ணச்சாந்து பூசி அலங்கரிக்கப்பட்ட மாடங்களில் எங்கும்; ஒழியா அணிநிதி - அழகிய நிதிகளும் அணிகளும் நீங்காதுள்ளன. (வி-ரை) விழாவணி - திருவிழாக்களின் பொருட்டுச் செய்யும் அலங்காரங்கள். எங்கும் - என்ற மூன்றிடங்களிலும் உள்ளன என்க. 78 முதல் 83 வரை பாட்டுக்கள் பார்க்க. அணி - இம்மூன்றிடங்களிலும் அணி உள்ளன என்பது. காளையர் - காளைபோன்ற இளைஞர்கள். தோகையர் - மயில்போன்ற பெண்கள். “தளிரடிமென் னகைமயிலைத் தாதவிழ்தார்க் காளைக்குÓ (1727). தூது இயங்கும் - தூது போல அசையும்; காளையர்களால் தரப்பட்ட மலர்களைக் கூந்தலின் அணிதலால் அதில் மொய்க்கும் வண்டுகள் அவர்களது தூது போல இயங்குகின்றன; “தாதுநின் றூதப் போய்வருந் தும்பிகா ளிங்கே.....மணியம் பலவனைக் கண்டென் மனத்தையுங் கொண்டுபோ துமினேÓ (திருவிசைப்பா.....கருவூர் - கீழ்க் - மணி - 3) ஓதி - கூந்தல். காளையர் - தோகையர் - தூதியங்கும் - என்றதனால் இவரிருப்பிடங்களின் அணிமை குறிப்பிற் கூறப்பட்டது; காளையர் பொருட்டு ஊடல் தீர்க்கத் தலைவியரிடம் தூது செல்லும் தோகையர் என்றுரைப்பாரும்; பெண்களின் ஞதிகளில் அணி ஒழியா என்று கூட்டி உரைப்பாரும்; வீதி யெங்கும் விழவணியும் காளையர்களும் தோகையர்களும் அணி நிதிகளும் மாடங்களும் உள்ளன என்றுரைப்பாரும் ஆகப் பலதிறத்தினர் உரையாசிரியர்கள். தூதாக விடுக்கப்படும் பொருள்களுள் வண்டும் ஒன்று. பூதி - சுண்ணச்சாந்து; பூதி - திருநீறு என்று கொண்டு அணிநிதி என்னும் இவ்வுலகச் செல்வமும், (வி)பூதி என்னும் வீட்டுலகச் செல்வமும் மாடங்கள் எங்கும் நிறைந்துள்ளன என்றலுமாம். பூதி - சிவச்செல்வம். இவ்வாறு பலதிறச் சுவைபட உரைக்க நின்ற ஒப்பற்ற அணிநலம் படைத்தது இப்பாட்டின் கவிநயம். எங்கும் என்ற முடிபுகள் மூன்றும், அணி என்பன மூன்றும் வைத்தலால் மூன்று முடிபாக உரைத்தல் ஆசிரியர் கருத்தென்பது கருதப்படும். இக்குறிப்பு இராமநாதச் செட்டியார் குறிப்புரையினும் கண்டது. |
|
|