பாடல் எண் :4085

வாயி லாரென நீடிய மாக்குடித்
தூய மாமர பின்முதற் றோன்றியே
நாய னார்திருத் தொண்டி யைப்புறு
மேய காதல் விருப்பின் விளங்குவார்,
7
(இ-ள்) வாயிலாரென....தோன்றியே - வாயிலார் என்னும் பழைமையாகிய பெருங்குடியில் தூய்மையாகிய பெருமரபில் முதல்வராய் அவதரித்து; நாயனார்...விளங்குவார் - தலைவராகிய சிவபெருமானது திருத்தொண்டில் அன்பு பொருந்திய பெருவிருப்பத்துடனே விளங்குவாராகி.
(வி-ரை) வாயிலாரென நீடிய மாக்குடி - வாயிலார் என்பது குறுக்கையர் - சேக்கிழார் - என்பனபோல இவரவதரித்த குடிப்பெயர்.
தூய மாமரபு - குடியினையுடைய தூய பெருமரபு. மரபு - குடியின் உட்பிரிவு; இப்பொருள் இராமநாத செட்டியார் குறிப்புரையிலும் கண்டது. சேக்கிழார் என்பது போலக் குடிப் பெயரே இயற்பெயராய் வழங்கலாயிற்றுப் போலும். வேளாளர் என்பது பெரும் பிரிவாகிய குலம். அதன் உட்பிரிவு குடி. மரபு - என்பது அதனுட்பிரிவு; “நடைமரபிற் குடிநாப்பண்....நிலைவேளாண்குலம் (1280) “குறுக்கையர் தங்குடிÓ.
நாயனார் - தலைவர்; சிவபெருமானுடைய; ஆறானுருபு விரிக்க.
காதல்விருப்பு- ஒரு பொருட்பன் மொழி; விருப்பின் மிகுதி குறித்தது.
விளங்குவார் - செய்வார் - அமைத்துத்தொழுது இருந்தார் என்று மேல்வரும் பாட்டுக்களுடன் முடிக்க. நயப்பு - விருப்பம்.