பாடல் எண் :4087

அகமலர்ந்த வர்ச்சனையி லண்ணலார் தமைநாளு
நிகழவரு மன்பினா னிறைவழிபா டொழியாமே
திகழநெடு நாள்செய்து சிவபெருமா னடிநிழற்கீழ்ப்
புகலமைத்துத் தொழுதிருந்தார் புண்ணியமெய்த் தொண்டனார்.
9
(இ-ள்) அகமலர்ந்த அர்ச்சனையில் - அகத்துள் விளங்கிய பூசையில்; அண்ணலார்தமை...நெடுநாள் செய்து - சிவபெருமானை நாடோறும் நிகழ வருகின்ற அன்பினாலே நிறையும் வழிபாட்டினை இடையறாது விளங்கும்படி நெடுநாட்கள் செய்து; சிவபெருமான். மெய்த்தொண்டனார் - சிவபெருமானது திருவடியின் கீழே புகலாக அடைந்து புண்ணிய மெய்த் தொண்டனாராகிய வாயிலார் நாயனார் தொழுது அமர்ந்திருந்தனர்.
(வி-ரை) அகமலர்ந்த அர்ச்சனையில் - வழிபாடு - அகப்பூசை; நிகழவரும் - விளங்க வருகின்ற;
ஒழியாமே - நீங்காமல்; எப்போதும்.
புகல் - புகுமிடமாக; தஞ்சமாக; நிலைபெற்ற இருப்பிடமாக. புகலமைத்து - புகுதலைப் பொருந்தி;
அடிநிழற்கீழ்த் தொழுதிருந்தார் - திருவடியில் சேர்ந்திருந்தார்; திருவடிமறவாது இடையறாத சிவபோகத்தில் தொழுதிருத்தலே வீடுபேறாம்.