பாடல் எண் :4092

இன்ன வகையாற் பெற்றநிதி யெல்லா மீச னடியார்கள்
சொன்ன சொன்ன படிநிரம்பக் கொடுத்துத் தூய போனகமுங்
கன்ன னறுநெய் கறிதயிர்பால் கனியுள் ளுறுத்த கலந்தளித்து
மன்னு மன்பி னெறிபிறழா வழித்தொண்டாற்றி வைகினார்.
4
(இ-ள்) இன்ன வகையால்.....கொடுத்து -இவ்வகையினாலே பெற்ற நிதிகள் எல்லாவற்றையும் சிவனடியார்கள் சொன்ன சொன்னபடியே கொடுத்து; தூய...அறித்து - தூய்மையாகிய திருவமுதும் சர்க்கரை - நளுமணமுள்ள நெய் - கறி - தயிர் - பால் - கனி - என்றிவையுள்ளிட்டனவாகியவற்றையும் கலந்து திருவமுது அளித்தும்; மன்னும்.......வைகினார் - நிலைபெரும் அன்பின் நெறியிற் பிறழாத வழித்தொண்டினைச் செய்து வாழ்ந்தார்.
(வி-ரை) சொன்ன சொன்னபடி - அவர்கள் திருவுளங்கொண்டு விரும்பிக் கேட்டவாறே - ஒன்றம் குறையாமல் - அடுக்கு உறுதிப்பொருள் தந்து நின்றது. கன்னல் - சர்க்கரை. கொடுத்து - அளித்துத் - தொண்டாற்றி - என்க. பொன்தருதல் ஈகை - கொடையின் பாற்படுதலின் கொடுத்து என்றார்; அளித்து - அமுதூட்டி; இது அளி - கருணையுடன் செய்யத்தக்கதாதலின் அளித்த என்றார்.
அன்பின் நெறிபிறழா வழித்தொண்டு - பிறழாமை - வழுவாமை; வழி - வழி வழி வருவது. பரம்பரை என்பர்.
வைகினார் - வாழ்ந்தனர்.