மற்றிந் நிலைமை பன்னனெடுநாள் வைய நிகழச் செய்துவழி யுற்ற வன்பின் செந்நெறியா லுமையாள் கணவன் றிருவருளாற் பெற்ற சிவலோ கத்தமர்ந்து பிரியா உரிமை மருவினார் முற்ற வுழந்த முனையடுவா ரென்னு நாம முன்னுடையார். | 5 | (இ-ள்) மற்று.....நெறியால் - முன் கூறிய இந்த நிலையிலே திருத்தொண்டினைப் பல நெடுங்காலம் உலகில் விளங்கும்படி செய்து வழிவழி வந்த அன்பினாலாகிய செம்மை நெறியினாலே; உமையாள்.....மருவினார் - உமையம்மையாரின் கணவனாராகிய சிவபெருமானது திருவருளினாலே அடையப் பெற்ற சிவலோகத்தில் அமர்ந்து மீளாத உரிமையினைப் பொருந்தினார்; முற்ற.......முன்னுடையார் - வெற்றி பொருந்தப் போர் செய்த காரணத்தால் முனையடுவார் என்னும் திருப்பெயரினைச் சிறக்க வழங்கப்பெற்ற பெரியார். (வி-ரை) இந்நிலைமை - முன் கூறிய இந்த நிலையையுடைய திருத்தொண்டினை; வழி உற்ற அன்பின் செந்நெறி - வழிவழி பொருந்திய அன்பினாலாகிய செம்மை நெறி - சிவநெறி. பிரியா உரிமை - எனறும் மீளாத தன்மை; சிவலோகத் தமர்ந்து பிரியா உரிமை - சாலோகப் பதவி. முற்ற உழந்த - முற்றுதல் - போர் வென்று கடத்தல்; உழத்தல் - முனைந்து போர் புரிதல்; உழந்த - உழத்தலால். உழந்த முனையடுவார் என்னு நாமம் - இப்பெயர் காரணத்தால் வந்தது; முன்னுடையார். முன் - சிறப்பாக; இவரது இயற்பெயர் இஃதன்று என்பது; இதனாலே இவரது பெயரை இப்புராணத்துள் முன்னே ஆசிரியர் கூறவில்லை. |
|
|