பாடல் எண் :4094

யாவ ரெனினு மிகலெறிந்தே யீச னடியார் தமக்கின்ப
மேவ வுளிக்கு முனையடுவார் விரைப்பூங் கமலக் கழல்வணங்கித்
தேவர் பெருமான் சைவநெறி விளங்கச் செங்கோன் முறைபுரியுங்
காவல் பூண்ட கழற்சிங்கர் தொண்டி னிலைமை கட்டுரைப்பாம்.
6
(இ-ள்) யாவரெனினும் இகல் எறிந்தே - எதிர்ப்பவர் யாவரே யாயினும் போரில் வெற்றி கொண்டே (அவ்வூதியங்களை); ஈசன்.....வணங்கி - இறைவனடியவர்களுக்கு இன்பம் பொருந்த அளிக்கும் முனையடுவார் நாயனாரது மணம் பொருந்திய பூங்கமலக் கழல்களை வணங்கி, (அத்துணையாலே); தேவர் பெருமான்....கட்டுரைப்பாம் தேவர் தலைவராகிய சிவனது நெறியினை உலகில் விளங்கும்படி செங்கோல் அரசு புரியும் காவல் பூண்ட கழற்சிங்க நாயனாரது திரத்தொண்டின் நிலைமையினைச் சொல்கின்றோம்.
(வி-ரை) இது இச்சரித முடிப்பும் மேல் வருஞ் சரிதத்தோற்றுவாயுமாகிய கவிக்கூற்று,
யாவரெனினும் - எத்தகைய வல்லமையுடையோராயினும். கூலி பேசி அமர் ஏற்றபின், எதிர்ப்பவர், தமக்கு நட்பு உறவு முதலிய எவ்வகையால் தொடர்புடையோராயினும் பாராது என்ற குறிப்புமாம். இகல் எறிந்து - போர் வென்று; இகல் - போர் ; எறிதல் - வெற்றி பெறுதல்;
கழல் - தானியாகு பெயராய்த் திருவடியை உணர்த்திற்கு. சிறந்த வீராதலால் கழல் கூறினார்.
யாவரெனினும்...அளிக்கும் - இச்சரிதசாரம். சைவ நெறிவிளங்க - முறைபுரியும் - வருஞ்சரித உள்ளுறையாகிய தோற்றுவாய். சைவம் சிறந்தோங்கும் பொருடடு அரசாட்சியை மேற் கொண்ட;
செங்கோல் முறைபுரியும் காவல் - அரசாட்சி.