பாடல் எண் :4096

படிமிசை நிகழ்ந்த தொல்லைப் பல்லவர் குலத்து வந்தார்
கடிமதின் மூன்றுஞ் செற்ற கங்கைவார் சடையார் செய்ய
அடிமல ரன்றி வேறொன் றறிவினிற் குறியா நீர்மைக்
கொடிநெடுங் தானை மன்னர் கோக்கழற் சிங்க ரென்பார்.
1
(இ-ள்) படிமிசை.....வந்தார் - உலகில் விளங்கிய பழைமையாகிய பல்லவர்களது குலத்தில் வந்தவதரித்தவர்; கடிமதில்......நீர்மை - காவல் பொருந்திய மதில்களையுடைய மூன்று நகரங்களையும் எரித்த, கங்கைதங்கிய நீண்ட சடையினையுடைய இறைவரது செம்மை பொருந்திய திருவடி மலர்களையே யல்லாமல் வேறொன்றினையும் தமது அறிவினில் பொருளாகக் குறியாத தன்மையினையுடைய; கொடி.........என்பார் - வெற்றிக் கொடியினை ஏந்திய நெடிய சேனைகளையுடைய அரசராகிய கோக்கழற்சிங்கர் என்னப்படுபவர்.
(வி-ரை) கோக்கழற்சிங்க ரென்பார் - வந்தார் - என்று கூட்டுக. என்பார் - எனப்படுவார்; படிமிசை......குலம் - முன் காலமுதல் உலகினில் விளங்க அரசாண்ட பழமைக் குலம் பல்லவர் மரபாம் என்பது; பல்லவர் - சோழரது ஒரு தொடர்புடைய பிரிவு. இவர்க்கு இடபக்கொடி உரித்து என்பர்.
கடி - காவல்; கடியப்படும் என்ற குறிப்புமாம்.
அடிமலரன்றி......நீர்மை - அன்றிக்குறியா என எதிர்மறையாற் கூறியது உறுதி குறித்தற்கு. நீர்மை - பெருங்குணமமைந்த;
அறிவினிற் குறியா - குறிக்கோளாக மனங் கொள்ளாத - சிந்தியாத - சிறந்த சிவபத்தியுடைமை. அறியவேண்டிய மெய்ப்பொருளை அறிந்தாராதலின் எனக் காரணக்குறிப்புப்பட அறிவினில் என்றார். உலகியற் பொருள்கள் பிறவும் புலப்படினும் அவற்றை அறிவினுட் குறிக்கொளமாட்டார் என்பார் அறியா என்னாது குறியா என்றார்.
கொடி - வெற்றிக்கொடி; ஈண்டுச் சோழர்களது புலிக்கொடி; பல்லவரது இடபக் கொடியுமாம்.
கோ - பெருமன்னர் - முடிமன்னர்.