பாடல் எண் :4098

குவலயத் தரனார் மேவுங் கோயில்கள் பலவுஞ் சென்று
தவலரு மன்பிற் றாழ்ந்து தக்கமெய்த் தொண்டு செய்வார்
சிவபுரி யென்ன மன்னுந் தென்றிரு வாரூ ரெய்திப்
பவமறுத் தாட்கொள் வார்தங் கோயிலுட் பணியப்புக்கார்.
3
(இ-ள்) குவலயத்து......செய்வார் - இந்நிலவுலகத்திற் சிவபெருமான் பொருந்தி விளங்கும் திருக்கோயில்கள் பலவும் சென்று பிறழாத அன்பினால் வணங்கி உண்மைத் திருத்தொண்டுகளைச் செய்வாராகி; சிவபுரி......எய்தி - சிவநகர் என்னும்படி நிலைபெற்ற தென்றிருவாரூரினைச் சேர்ந்து; பவமறுத்து.......புக்கார் - பிறவியினை அறுத்து ஆளாகக் கொள்ளும் இறைவரது திருக்கோயிலுனுள்ளே புகுந்தனர்.
(வி-ரை) அரனார் கோயில்கள் பலவும் சென்று - சிவத்தலயாத்திரையினை மேற்கொண்டனர். இது இவர் சிறந்த சிவபத்தராதலினாலும் அரசராதலானும் மேற்கொண்ட நிலை.
தவலுறுதல் - பிறழ்தல்.
தக்க மெய்த்தொண்டு - தக்க - தமக்குத் தகுதியான; மெய்த்தொண்டு - உண்மை நெறியினிற்கும் தொண்டு; மெய் - உடம்பு, உடலாலாகிய தொண்டு என்ற குறிப்பு முடையது.
சிவபுரி என்ன மன்னும் - சிவலோகம் இது என்று சொல்லும்படி; திருவாரூர்ப் பிறந்தார்களெல்லாரும் பிறவியற முத்தியிற் செல்வார் என்றலால் சிவபுரி எனத் தகுவது.
தென் - திருவாரூர் - இறைவர் எழுந்தருளிய பூங்கோயில் தென்றிருவாரூரில் உள்ளது. தென் - பிறிதினியையு நீக்கிய விசேடணம். “தென் றிருவாரூர் புக்கு எல்லை மிதித்தடியேன்Ó (நம்பி).
பவம் அறுத்து ஆளவல்லார் - பிறவி வேரினை அறுத்துத், தம் அடிமையாக வைப்பவர்; புற்றிடங் கொண்டார் - தியகேசருமாம்.
பணிய - வணங்குதற் பொருட்டு. இவரது பட்டத்துத் தனித்தேவி பணிதலில் உடன் நில்லாது கோயிலின் பெருமை கண்டுவந்தனள் என்றும், இறைவர்க்காக வைத்த புதுப்பூவை மோந்து பின்னர்க் குற்றம் செய்தனள் என்றும், வருவது சரிதமாதலின், அரசர் பணியச் சென்றார் என்று, வேறாக விதந்து கூறினார்.