பாடல் எண் :4099

அரசிய லாயத் தோடு மங்கணர் கோயி லுள்ளால்
முரசுடைத் தானை மன்னர் முதல்வரை வணங்கும் போதில்
விரைசெறி மலர்மென் கூந்த லுரிமைமெல் லியலார் தம்முள்
உரைசிறந் துயர்ந்த பட்டத் தொருதனித் தேவி மேவி,
4
(இ-ள்) அரசியல்.....போதில் - முரசுகளையுடைய சேனை மன்னர் ஐவகைக் குழுக்கள் சூழ இறைவருடைய கோயிலினுள்ளே சென்று முதல்வராகிய புற்றிடங் கொண்டாரை வணங்கும் பொழுது; விரைசெறி.......மேவி - மணமிக்க மலர்களை யணிந்த மெல்லிய கூந்தலையுடைய உரிமைத் தேவியர்களுள்ளே புகழாற் சிறந்து உயர்ந்த பட்டத்துத் தனித்தேவி வந்து;
(வி-ரை) அரசியல் ஆயம் - அரசுரிமைச் சுற்றத்தார்; ஐவகை குழுக்கள்; மந்திரியர் - புரோகிதர் - சேனாபதியர் - தூதர் - சாரணர் என்போர்.
அங்கணர் - புற்றிடங்கொண்ட பெருமான்; அவரது திருக்கோயிலென்று கோயிலினைக் குறிக்கவந்த அடைமொழி, அரசர் வணங்கிய பெருமானையும் குறித்தது;
முதல்வர் - புற்றிடங்கொண்டார்; வணங்கும்போதில் - வணங்கிக் கொண்டிருக்கும் சமயத்தில்;
உரிமை மெல்லியலார் - உரிமை மனைவியர்கள்;
உரை.......தேவி - புகழ்சிறந்த பட்டத்தரசி; அரசர்க்கு மனைவியர் பலர் இருந்தனர்; அவருள்ளே முதல்மனைவியாரே பட்டத்தரசியாவ ராதலின் அத்தேவி1. உரை - புகழ்; இவரது தயை முதலிய நற்குணங்களைக் குறித்தது.