பாடல் எண் :4100

கோயிலை வலங்கொண் டங்கட் குலவிய பெருமை யெல்லாம்
சாயன்மா மயிலே போல்வா டனித்தனி கண்டு வந்து
தூயமென் பள்ளித் தாமந் தொடுக்குமண் டபத்தின் பாங்கர்
மேயதோர் புதுப்பூ வங்கு விழுந்ததொன் றெடுத்து மோந்தாள்.
5
(இ-ள்) கோயிலை....கண்டுவந்து - சாயலினால் மயிலே போல்வாளாகிய அத்தேவி கோயிலை வலமாக வந்து அங்கு உள்ள பெருமைகளை யெல்லாம் தனித்தனியே பார்த்து வந்து; தூய....பாங்கர் - தூய்மையுடைய மெல்லிய பள்ளித்தாமங்களைத் தொடுப்பதற்குரிய மண்டபத்தின் பக்கத்திலே; மேயதோர் .....மோந்தாள் - பொருந்தியதோர் புதியபூ அங்கு விழுந்ததொன்றினை எடுத்து மோந்தனள்.
(வி-ரை) அங்கட் குலவிய பெருமை எல்லாம் தனித்தனி கண்டு வந்து - கோயிலை வெளிச் சுற்றிலே வலங்கொண்டு அங்கு உள்ள தனிக் கோயில்களையும், சிற்ப முதலிய அழகுகளையும் தனித்தனி பார்த்தனர் என்க.
பள்ளித்தாமம் தொடுக்கும் மண்டபம் - பூமண்டபம்; இது பூங்கோயிலின் தென்கீழ்ப் பாங்கு திருவாரூ ரரநெறித் திருக்கோயிலினுள் உள்ள மண்டபம் என்பது வழிவழிக் கேள்வியாற் பெறப்பட்ட செய்தி;
ஓர் புதுப்பூ அங்கு விழந்தது ஒன்று - ஓர் - என்பது வகையினையும், ஒன்று என்பது தொகையினையும், புதுப்பூ என்றது அது இறைவருக்கு ஏற்பிக்க உள்ளது என்ற செய்தியினையும், பண்பையும் உணர்த்தின. “ஆரூர் மணிக்கு வைத்த போதுÓ என்பது வகைநூல்; விழுந்தது - பூமண்டபத்தினுள் விழுந்த மலர்களும் எடுத்துச் சாத்தும் விதியுடையன.
எடுத்து மோந்தாள் - மோந்தாள் என்றலே அமையுமாயினும், எடுத்தல் ஒன்றும் மோத்தல் ஒன்றுமாக இரு வேறு பிரித்துக் கூறினது, பின்னர்ச் சரிதத்தின் இரு வேறு நிகழ்ச்சிகளின் குறிப்புத்தருதற்கு;
சாயல் மா மயிலே போல்வாள் - சாயல் - மென்மை, வடிவம் என்றலுமாம். இவ்வம்மை மிக்க அழகுடையவர் என்பது கல்வெட் டாராய்ச்சியாற் கண்டதென்ப; மேலும் “தோகை மயிலேனÓ (4102) “பைந்தளிர்ப் பூங்கொம் பொன்றுÓ (4103) என்றுரைத்தல் காண்க. உருவுவமம்.