பாடல் எண் :4105

கட்டிய வுடைவா டன்னை யுருவி “யக் கமழ்வா சப்பூத்
தொட்டுமுன் னெடுத்த கையாம் முற்படத் துனிப்பÓ தென்று
பட்டமு மணிந்து காதல்பயில்பெருந் தேவி யான
மட்டவிழ் குழலாள் செங்கை வளையொடுந் துணித்தா ரன்றே.
10
(இ-ள்) கட்டிய.....உருவி - தமது இடுப்பிற் கட்டிய உடைவாளை உருவி; அக்....என்று - அந்த மணங்கமழ் பூவினைத் தொட்டு முன்னர் எடுத்த கைதான் முன்னர்த் துணிக்கப்படுவது தகுதி என்று சொல்லி; பட்டமும்....அன்றே - தமது அரசுரிமைப் பட்டமும்பூண்டு தமது காதலையும் பூண்டு பயில்கின்ற பெருந்தேவியாகிய மணம்விரியும் கூந்தலையுடைய அவளது செங்கையினை அணிந்த வளையலோடும் அப்பொழுதே துணித்தனர்.
(வி-ரை) கையாம் முற்படத் துணிப்பது - துணிக்கப்படுவது எனப் பிறவினைப் பொருளில் வந்தது; முற்பட - முன்னே, உடைவாள் - உடையில் செருகியுள்ளவாள்.
தொட்டுமுன் எடுத்த - எடுத்தலால் எனக் காரணக் குறிப்புடன் நின்றது; கை தொட்டு எடுத்துத்தரப் பின் மூக்கு முகர்ந்தது ஆதலின் கையே முதற் குற்றவாளியாம்; அதனையன்றோ முன்னர்த் தண்டித்தல் தகுதி என்றபடி.
பட்டமும்...குழலாள் - ஏனை யாவராயினும் இந்நிலையிலிருந்தால் இத்தன்மைகளில் மனம்பற்றி, உற்ற செயல் செய்யாது விடுவர் என்ற குறிப்புப்படக் கூறியது இந் நாயனாரது செயற்கருஞ் செய்கையின் மேன்மை தோன்றக் கூறியது; சிவன் பணியின் கடமையின் முன்னர் இவ்வுலக பாசபந்தத் தன்மைகள் வலியற்றொழிந்தன என்பதே அடிமைத்திறம்; இவ்வாறு அரசராற்றண்டிக்கப் பட்டமையின் அவ்வரசி சிவாபராதமாகிய குற்றத்தின் நீங்கி நற்கதியடையக் காரணமாயிற்று; இக் குறிப்புப் பெறப் “பவமறுத்தாட் கொள்வார்Ó (4098) என்று முன் கூறியது காண்க. உலகியலில் வன்மை போலக் காணப்படினும் இது கருணைச் செயலே என்பதாம்; “நீடுபெரும் பாவமின்றே நீங்குமென நாடிÓ (போர் - பல்); பட்டமும் - உம்மை உயர்வு சிறப்பு. மட்டு - தேன்; அவிழ் - விரிந்தலைந்த என்ற குறிப்பு.
கையே - என்பதும் பாடம்.