ஒருதனித் தேவி செங்கை யுடைவாளாற் றுணித்த போது பெருகிய தொண்ட ரார்ப்பின் பிறங்கொலி புவிமேற் பொங்க இருவிசும் படைய வோங்கு மிமையவ ரார்ப்பும் விம்மி மிருவிய தெய்வ வாச மலர்மழை பொழிந்த தன்றே. | 11 | (இ-ள்) ஒருதனி...போது - தமது ஒப்பற்ற தனித் தேவியின் செங்கையினை அரசர் உடைவாளினாற் றுண்டித்த போது; பெருகிய.......பொங்க - பெருகிய தொண்டர்களின் அர முழக்கமாகிய விளக்கமுடைய ஒலி நிலவுலகின் மேலே பொங்க; இருவிசும்படைய.......விம்மி - ஆகாய முழுதும் கிளம்பும் தேவர்களது முழக்கமும் கூடிப் பெருகி; மருவிய.......அன்றே - பொருந்திய தெய்வமணமுடைய கற்பகம் பூமாரியும் அப்பொழுதே பெய்தது. (வி-ரை) ஒரு தனித்தேவி - முன் (4099 - 4105) உரைத்தவை பார்க்க. தொண்டர் ஆர்ப்பின் பிறங்கொலி - அரகர முழக்கம். பொங்க - மிக்கோங்க. இமையவ ரார்ப்பு - தேவதுந்துபி முதலிய முழக்கு. அடைய - நிறைய; முழுதும்; ஓங்கும் - நிறைந்த; விம்மி - பெருகி; விம்முதல் - பெருகுதல். இவை திருத்தொண்டின் விளக்கமும் அருமைப்பாடும் கண்டபோது நிகழ்வன தெய்வ வாசமலர் - மணமுள்ள மந்தார முதலிய தெய்வ மரங்களின் பூக்கள். |
|
|