பாடல் எண் :4109

எழுந்திரைமா கடலாடை யிருநிலமா மகண்மார்பில்
அழுந்துபட வெழுதுமிலைத் தொழிற்றொய்யி லணியினவாஞ்
செழுந்தளிரின் புடைமறைந்த பெடைகளிப்பத் தேமாவின்
கொழுந்துணர்கோ திக்கொண்டு குயினாடுங் கோனோடு.
1
(இ-ள்) எழுந்திரை.....மார்பில் - மேன்மேல் எழுந்து வருகின்ற அலைகளையுடைய பெருங்கடலினை ஆடையாகவுடைய பெரிய நிலமாகிய மகளின்மார்பில்; அழுந்துபட....அணியினவாம் - அழுந்தும்படி எழுதுகின்ற இலைகள் போலச் சித்திரிக்கப்பட்ட தொய்யிலின் அணியினைக் கொண்டுள்ளன; செழுந்தளிரின்.....கோனாடு - செழிய தளிர்களின் பக்கத்தில் மறைந்த பெடை மகிழும்படி தேமாவின் றளிர்களைக் கோதிக்கொண்டு குயில்கள் நாடுகின்ற கோனாடு என்பது.
(வி-ரை) கோனோடு - தொய்யிலணியினவாம் என்று இயையும்; ஒருமைப் பன்மைமயக்கம். நாட்டின் இடங்கள் அணியின என்றலுமாம்.
அழுந்துபட - அழுந்த; ஒரு சொல். எழும்திரை - உயரும் அலைகளையுடைய; மா - கரிய என்றலுமாம்.
எழுதும் இலைத் தொழில் தொய்யில் - சந்தனக் குழம்பினால் பெண்களின் மார்பில் இலை பூ முதலிய வடிவங்களாய்ச் சித்திரித்து எழுதும் அணி விசேடம் தொய்யில் எனப்படும்.
கடலாடை - நிலமகள் - உருவகம்.
தேமாவின் துணர்ச் சோலைகள் சூழ்ந்து இருத்தலின் நிலமகள் மார்பில் இலைத் தொழில்பட எழுதும் தொய்யில் போன்றது இந்நாடு என்பதாம்.
தேமாவின் கொழுந்துணர் கோதி - குயில்கள் மாவின் இளந்தளிர்களைக் கோதிக் களிக்கு மியல்பின; “பானுறு மலர்ச்சூதப் பல்லவங்க ளவைகோதி, யேனோர்க்கு மினிதாக மொழியுமெழி லிளங்குருகேÓ [பிள் - பழந்தக்க - தோணிபுரம் - 8]. துணர் - பூ என்றலுமாம்; “பானாறு மலர்ச்சூதப் பல்லவங்களவை கோதி......மொழியுமெழி லிளங்குயிலேÓ (பிள் - தேவா - தோணிபுரம் ). மறைந்த பெடை களிப்பக் குயில் நாடும் என்று கூட்டுக; மறைந்த பெட்டையைக் காணாது குயில் தேட அதுகண்டு பெடை, களிக்கின்றது; சிறுவர் காதலர் விளையாட்டு வகைக் குறிப்பு. துணர் கோதிக் கொண்டு - என்பது தேடுதற்குத் தன்னை ஊக்கப்படுத்திக் கொண்டு என்ற குறிப்பு. குயில் - ஆண் குயில்கள்;
கோனாடு - இது புதுக்கோட்டையின் ஒரு பகுதி.
பெடைக்களிக்க - என்பதும் பாடம்.