பாடல் எண் :4110

முருகுறுசெங் கமலமது மலர்துதைந்த மொய்யளிகள்
பருகுறுதெண் டிரைவாவிப் பயில்பெடையோ டிரையருந்தி
வருகுறுதண் டுளிவாடை மறையமா தவிச்சூழல்.
குருகுறங்குங் கோனாட்டுக் கொடிநகரங் கொடும்பாளூர்.
2
(இ-ள்) முருகுறு........வாவி - மணங்கமலும் செந்தாமரைத் தேனை மலரில் மொய்த்த வண்டுகள் பருகுதற்கிடமாகிய தெளிந்த அலைகளையுடைய வாவியில்; பயில் பெடையோடு......மறைய - பொருந்திய பெண்பறவைகளோடு இறையினை உண்டு, மோதிவரும் குளிர்ந்த வாடைக்காக மறைந்துறையும்படி; மாதவிச் சூழல் குருகு உறங்கும் - குருக்கத்திச் சோலையில் குருகுகள் உறங்குகின்ற; கோனாட்டுக் கொடி நகரம் கொடும்பாளூர் - கோனாட்டிலே கொடி நகரம் கொடும்பாளூர் என்ப தாகும்.
(வி-ரை) நாட்டுவளமும் நகரச்சிறப்புங் குறித்தது இப்பாட்டு. தாமரை மலர்களின் தேனை வண்டுகள் உண்கின்றன; அத் தடாகங்களில் குருகுகள் ஆணும் பெண்ணுமாகக் கூடி இரையருந்தி வாடைக் கொதுங்கித் குருக்கத்திச் சோலையில் உறங்குகின்றன; இவ்வாறு தடாகங்களும் சோலைகளும் சூழ வுள்ளது கோனாட்டின் கொடும்பாளூர் - என்பதாம். அளிகள் கமலமது பருகுதல் இச்சரிதக் குறிப்பு.
கொடிநகரம் - தலைநகரம்; இராசதானி. மாதவி - முல்லை விசேடமுமாம்.
கொடும்பாளூர் - இது தலை நகரத்தின் பெயர்.
மது - பருகுறும் - வாவி(யில்) என்க.
செங்கமல மலர்மகரந்த - பெருகுறு தெண் - என்பனவும் பாடங்கள்.