பாடல் எண் :4113

சைவநெறி வைதிகத்தின் றருமநெறி யொடுந்தழைப்ப
மைவளருந் திருமிடற்றார் மன்னியகோ யில்களெங்கும்
மெய்வழிபாட் டர்ச்சனைகள் விதிவழிமேன் மேல்விளங்க
மொய்வளர்வண் புகழ்பெருக முறைபுரியு மந்நாளில்,
5
(இ-ள்) சைவநெறி.....தழைப்ப - சைவநெறியானது வைதிக தரும நெறியுடனே தழைக்க; மைவளரும்....விளங்க - விடத்தினைக் கொண்ட திருமிடற்றினையுடைய இறைவர் நிலைபெற வீற்றிருக்கும் திருக்கோயில்களிலெங்கும் உண்மை வழிபாடாக அர்ச்சனைகள் சிவாகம விதிவழியே மேன்மேல் விளங்க; மொய்...புகழ் பெருக - கூடிவளர்கின்ற வளப்பமுடைய புகழ் பெருக; முறைபுரியும் அந்நாளில் - அரசு செலுத்தும் நாளிலே.
(வி-ரை) தழைப்ப - விளங்க - பெருக - புரியும் - என்று கூட்டுக; இச்செயல்கள் இவரது ஆட்சியில் ஒருங்கு உடனிகழ்ச்சி பெறச் செய்யப்பட்டன.
சைவ...தருமநெறியொடும் - “வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்கÓ என்ற கருத்து; தருமம் - வைதிக தருமம்; இவை உலகியற் பயன் றருவன; சைவநெறி; இவை வீடுபேற்றுப் பயன் றருவன; இகபர மிரண்டும் தழைக்க.
அர்ச்சனைகள்....விளங்க - சிவன் கோயிற் பூசைகள் சிவாகம விதிப்படி மேன்மேல் விளங்கும்படி; மொய் - மிக்க நெருங்கிய.
வண் - வள்ளன்மையாலும்; புகழ் - ஆட்சி முறையினாலும் வருவது.
முறை - நீதிமுறை. புரியும் - வழங்கும்.