சங்கரன்ற னடியாருக் கமுதளிக்குந் தவமுடையார் அங்கொருவ ரடியவருக் கமுதொருநா ளாக்கவுடல் எங்குமொரு செயல்காணா தெய்தியசெய் தொழில்முட்டப் பொங்கியெழும் பெருவிருப்பாற் புரியும்வினை தெரியாது. | 6 | (இ-ள்) சங்கரன்.......அங்கொருவர் - அங்குச் சங்கரரது அடிய வர்க்கு அமுது அளிக்கும் தவத்தினையுடையார் ஒருவர்; அடியவருக்கு.....முட்ட - ஒருநாள் அடியவருக்குத் திருவமுதாக்குதற்குரிய பண்டங்கள் பெற எங்கும் ஒரு செயல் காணாமையால் தாம் செய்துவந்த பொருந்திய அத்தொழில் முட்டுப்பட; பொங்கி....தெரியாது - மேன்மேலும் பொங்கி எழுகின்ற பெரிய விருப்பத்தினாலே தாம் செய்யும் செயல் தெரியாது. (வி-ரை) ஒருநாள் அடியவருக்கு அமுதாக்க என்க; உடல் - உபகரணங்கள்; “ஒளிவிளக் கேற்றற் குடலிலனாய்Ó (திருவந் - 54). இதனை உடன் என்று பாடங்கொண்டோதுவாருமுண்டு. தவமுடையவராகிய ஒரு அடியவர்; ஆக்க - தாம் செய்து வந்த; செய்விக்க; எய்திய செய்தொழில் - பொருந்திய திருவமுதூட்டும் பணி; புரியும் வினை தெரியாது - தாம் செய்ய எண்ணிய தொழில் திருட்டாகும் என்ற இழிபினை யறியாமல். இன்னது செய்வது என்ற வழியறியாமல் என்றலுமாம். ஒருவருக்கு ஒருபொருள்மேல் பெருவிருப்பு மூண்டிடின் அதுபற்றிச் செய்யும் வினையின் ஏற்றத்தாழ்வு நாடாது செய்வர் என்பது உலகியல் உண்மை; பெருவிருப்பும் பெருஞ்சினமும் அறிவினை அழிக்கும் தன்மையனவாம்; ஆதலின் “காய்த லுவத்த லகற்றி யொருபொருட்கண், ஆய்த லறிவுடையார்க் கண்ணதேÓ என்றனர் பிற்காலத்து நீதிநூலார். |
|
|