அரசரவர் பண்டாரத் தந்நாட்டி னெற்கூட்டின் நிரைசெறிந்த புரிபலவா நிலைக்கொட்ட காரத்தின் புரைசெறிநள் ளிருளின்கட் புக்குமுகந் தெடுப்பவரை முரசெறிகா வலர்கண்டு பிடித்தரசன் முன்கொணர்ந்தார். | 7 | (இ-ள்) அரசரவர் பண்டாரத்தில் - இடங்கழியாராகிய அரசரது பொக்கிசத்திலே; அந்நாட்டின்.......எடுப்பவரை - அந்நாட்டின் நெற்கூடுகளின் வரிசை நிறைந்த மதிற் காவல் பலவுள்ள நிலைக்கொட்டகாரத்தில் எங்கும் மிகுந்து இருள் நிறைந்த பாதி இரவிலே புகுந்து நெல்லினை முகந்து எடுக்க அவரை; முரசெறி.....முன்கொணர்ந்தார் - கடிகைப்படி இரவுமுழுதும் காவல் முரசு முழக்கம் காவலர்கள் கண்டு அவரைப்பற்றி அரசன் முன்னே கொண்டுவந்தனர். (வி-ரை) பண்டாரம் - பொக்கிசம் - நிதிகள் சேமிக்குமிடம்; செல்லும் பெருஞ்செல்வத்துள் சேர்த்தெண்ணப்படும். 4117 - பார்க்க. அந்நாட்டின் நெற்கூட்டின் - அந்நாட்டின் இறைப்பொருளாய் வந்த நெற்கூட்டின்; அரசரின் கீழ்ப் பல நாடுகளிருத்தலின் அவ்வந்நாட்டு இறைப்பொருள் நெற்கூடுகள் அங்கங்கும் அமைக்கப்படுவன என்பது. நிலை - வரிசை. புரிபலவாம் நிலைக்கொட்டகாரம் - மதில் வகையால் பற்பலபுரிகளாக அரண் அமைக்கப்பட்ட கொட்டகாரம்; புரி - போர்கள்; கொட்டகாரம் - பண்டங்கள் சேமிக்கும்படி அமைந்த பெரு வீடு. புரை செறி நள் இருள் - மிக்க நள்ளிருள் இடை. முரசெறி காவலர் - யாமத்தின் அளவுஇரவு கடிகை தெரிப்ப இரவு முழுதும் முறைப்படுத்தி முரசெறிந்து காவல்புரியும் காவலாளர் - (Night guards) ; முரசு - நாழிகைப்பறை; |
|
|