பாடல் எண் :4120

உள்ளும் புறம்புங் குலமரபி னொழுக்கம் வழுவா வொருமைநெறி
கொள்ளு மியல்பிற் குடிமுதலோர் மலிந்த செல்வக் குலப்பதியாந்
தெள்ளுந் திரைகண் மதகுதொறுஞ் சேலுங் கயலுஞ் செழுமணியுந்
தள்ளும் பொன்னி நீர்நாட்டு மருக னாட்டுத் தஞ்சாவூர்.
1
(இ-ள்) தெள்ளும்........தஞ்சாவூர் - தெளிந்த அலைகள் மதகுகள்தோறும் சேல்மீன்களையும் கயல்மீன்களையும் செழுமணிகளையும் தள்ளுகின்ற காவிரிபாயும் நீர்நாடு என்கின்ற சோழநாட்டிலே மருகல் நாட்டில் உள்ள தஞ்சாவூர் என்பது; உள்ளும்....பதியாம் - அகமும் புறமும் குலமரபின் வரும் ஒழுக்கத்தினின்றும் வழுவாத ஒருமையாகிய நெறியினைக் கொள்ளும் இயல்பினையுடைய பழங்குடி முதன் மக்கள் நிறைந்த செல்வம் பொருந்திய பெருமைப் பதியாகும்.
(வி-ரை) உள்ளும்.....வழுவா - தத்தமக்குள்ளேயும் புற உலகியல் நிலையிலேயும் தத்தமது குலமரபின் வழிவழிவந்த ஒழுக்கத்தினின்றும் பிறழாத, இதனை, உள்ளும் புறம்பும் குலவொழுக்கம் வழுவி ஒழுகுவதே முறை என்னும் ஒழுக்கமுடைய இந்நாளின் மாக்களினத்துடன் ஒப்பிட்டு உண்மை உயர்வு தாழ்வு காண்க. குலப்பதி - விளக்கமுடைய பதி; பெருமையுடைய ஊர். குலம் - உயர்ச்சி;
தள்ளும் - மதகில் சிறியவழியாதலின் நீர் வேகமாகச் செல்வதால் தள்ளும் என்றார்.
சேலும் கயலும் செழுமணியும் - இரண்டனுருபுகள் விரிக்க.
தெள்ளும் திரை - தெள்ளுதல் - தெளிதல்.
மருகல் நாடு - சோழநாட்டின் உட்பிரிவுகளுளொன்று. தலவிசேடம் பார்க்க.
செம்பொன்றரளஞ் செழுமணியும் - என்பதும் பாடம்.