சீரின் விளங்கு மப்பதியிற் றிருந்து வேளாண் குடிமுதல்வர் நீரின் மலிந்த செய்யசடை நீற்றர் கூற்றி னெஞ்சிடித்த வேரி மலர்ந்த பூங்கழல்சூழ் மெய்யன் புடைய சைவரெனப் பாரி னிகழ்ந்த செருத்துணையார் பரவுந் தொண்டி னெறிநின்றார். | 2 | (இ-ள்) சீரின்......முதல்வர் - சிறப்புடன் விளங்கும் அப்பதியில் திருந்துகின்ற வேளாளர் குடியின் முதல்வர்; நீரின்....சைவரென - கங்கை நிறைந்த சிவந்த சடையினையும் திருநீற்றினையும் உடைய இறைவரது இயமனை மார்பி லுதைத்த தேன் பொருந்திய பூங்கழல்களையே எண்ணுகின்ற மெய்யன்புடைய சைவர் என்று; பாரின்.....நெறிநின்றார் - உலகில் விளங்கிய செருத்துணையாரென்பார் போற்றுகின்ற திருத்தொண்டின் நெறியிலே ஒழுகிவந்தனர். (வி-ரை) திருந்து - உலகம் திருந்துதற் கேதுவாகிய; நீற்றர் - திருநீற்றின் முதல்வர்; சிவபெருமான். நெஞ்சிடித்த - மார்பில் உதைத்த; “காலனை யுயிர்செக வுதைகொண்ட மலர்ந்த பாதங்கள்Ó (திருவிசைப்பா.) இடித்த - தகரும்படி உதைத்தருளிய; சைவர் - சிவசம்பந்த முடையவராய்ச் சிவநெறி வாழ்பவர். சைவர் - என வழங்கும் உலக வழக்குக்குப் பொருள் விரித்த அரிய ஆட்சி. சூழ்தல் - சிந்தித்தல். வேரிமலர்ந்த - என்பதும் பாடம். |
|
|