பாடல் எண் :4123

உலகு நிகழ்ந்த பல்லவர்கோச் சிங்க ருரிமைப் பெருந்தேவி
நிலவு திருப்பூ மண்டபத்து மருங்கு நீங்கிக் கிடந்ததொரு
மலரை யெடுத்து மோந்ததற்கு வந்த பொறாமை வழித்தொண்டர்
இலகு சுடர்வாய்க் கருவியெடுத் தெழுந்த வேகத் தாலெய்தி,
4
(இ-ள்) உலகு......பெருந்தேவி - உலகில் அரசுபுரியும் பல்லவர் கோச்சிங்கருடைய பட்டத்துரிமையுடைய பெருந்தேவி; நிலவு....மோந்தற்கு - விளங்கும் திருப்பூமண்டபத்தில் பக்கத்தில் நீங்கிக் கிடந்ததொரு புதுப்பூவை எடுத்து மோந்ததற்காக; பொறாமை - மனம் பொறுக்கமாட்டாமையாலே; வழித் தொண்டர்....வேகத்தால் - அரனெறி வழிவழி வரும் திருத்தொண்டராதலின் விளங்கும் ஒளி பொருந்திய கூரிய வாயினையுடைய கருவியினை எடுத்து எழுந்த வேகத்தோடும்; வந்து எய்தி - வந்து சேர்ந்து,
(வி-ரை) உலகு நிகழ்ந்த....மோந்ததற்கு - இதன் விரிவு முன் (4099 - 4100) கழற்சிங்க நாயனார் புராணத்துள் உரைக்கப்பட்டது. வந்து - எய்தி என்று கூட்டுக; வந்த என்பது பாடமாயின், வத்த பொறாமை - மனத்துள் வந்த பொறுக்கலாற்றாமை என்க.
வழித்தொண்டர் - வழி - சிவநெறி வழியே ஒழுகிய; “பரவுந் தொண்டின் நெறி நின்றார்Ó - (4121); வழித்தொண்டராதலின் எனக் காரணக் குறிப்புடன் நின்றது; வழித்தொண்டராதலின் தனித்தொண்டர் அரிந்தார் என்று கூட்டுக; ஏனையோர்கள் இவ்வாறுவரும் அபராதங்களைக் கண்டு சிறிதும் கருதாது செல்கின்றாரெனில் அவர்கள் திருத்தொண்டின் வழிநிற்பாரல்லர் என்பதாம்.
எழுந்த - மனத்துள் எழுந்து உடலினைச் செலுத்திய; வேகம் - உடலின் செலவு வேகம்; கோபம் என்றலுமாம்; கோபமாவது சிவாபராதம் கண்டு பொறாத தன்மையால் வருவது. “வேகியானாற் போல்Ó (சித்தி - 1 - 50); மனக்குற்ற மாகிய குணமன்று. வேகத்தால் - வேகத்தோடு.
எடுத்தெழுந்து - என்பதும் பாடம்.