பாடல் எண் :4124

கடிது முற்றி மற்றவடன் கருமென் கூந்தல் பிடித்தீர்த்துப்
படியில் வீழ்த்தி மணிமூக்கைப் பற்றிப் “பரமர் செய்யசடை
முடியி லேறுந் திருப்பூமண் டபத்து மலர்மோந் திடுமூக்கைத்
தடிவ னென்று கருவியினா லரிந்தார் தலைமைத் தனித்தொண்டர்.
5
(இ-ள்) கடிது.....பற்றி - விரைவிற் சேர்ந்து மற்று அவளது கரிய மெல்லிய கூந்தலைப் பிடித்து இழுத்து நிலத்தில் வீழ்த்தி அழகிய மூக்கினைப் பிடித்து; பரமர்......என்று - இறைவரது சிவந்த சடை முடியின் மேல் அணியும் திருப்பூமண்ட பத்துள் மலரினை எடுத்து மோந்த அபராதம் செய்த மூக்கைத் தண்டிப்பேன் என்று; கருவியினால்....தனித்தொண்டர் - கருவியினாலே தலைமைபூண்ட ஒப்பற்ற தொண்டர் அரிந்தனர்.
(வி-ரை) முற்றி - சேர்ந்து; மற்றவள் - தகாத செய்கை செய்தவள் என்ற குறிப்புப்பட மற்று என்றார்.
கருமென்...பற்றி - இவை மூக்கரியும் தண்டம் செய்தற்குற்ற செயல்கள்; வன்மை பற்றயனவல்ல.
பரமர்....தடிவன் - இஃது இவர் மனத்துட்கொண்ட துணிவு.
தலைமைத் தனித்தொண்டர் - இச்செயல்வேறு எவராலும் செய்யலாகாதது என்பது; மேல்வரும் பாட்டுப் பார்க்க.
முட்டி - என்பதும் பாடம்.