பாடல் எண் :4125

அடுத்த திருத்தொண் டுலகறியச் செய்த வடலே றனையவர்தாந்
தொடுத்த தாம மலரிதழி முடியா ரடிமைத் தொண்டுகட
லுடுத்த வுலகி னிகழச் செய் துய்யச் செய்ய பொன்மன்றுள்
எடுத்த பாத நிழலடைந்தே யிறவா வின்ப மெய்தினார்.
6
(இ-ள்) அடுத்த......அனையவர்தாம் - அடுத்ததாகிய திருத்தொண்டினை உலக மறியும்படி செய்த வலிமை பொருந்திய ஆண்சிங்கம் போன்ற செருத்துணையன்பர்; தொடுத்த......செய்து - தொடுக்கப்பட்ட மாலை போன்ற கொன்றைப் பூவினைச் சூடிய திருமுடியினையுடைய சிவபெருமானது அடிமைத் திருத்தொண்டினைக் கடல் சூழ்ந்த உலகத்தில் நிகழ்ந்து விளங்கும்படி செய்து; உய்ய......எய்தினார் உயிர்கள் உய்யும்படி செம்பொன் அம்பலத்தில் எடுத்த திருவடியின் நீழலில் அடைந்தே இறவாத இன்பத் தினை அடைந்தனர்.
(வி-ரை) அடுத்த - தமக்குத் திருவருளால் நேர்பட்ட; திருத்தொண்டு - இச் சரித நிகழ்ச்சி; உலகறிய.....அனையவர் - இத்தொண்டு செய்தற்குரிய ஆண்மை குறித்தது; ஏறு - ஆண்சிங்கம்.
தாம மலர் இதழி - மாலைபோற் சரமாகப் பூக்கும் சரக்கொன்றை; தாமமாகக் கட்டப்பட்ட கொன்றை மாலை என்றலுமாம்.
நிகழச்செய்தலாவது - ஒழுகலாற்றில் விளங்கி வழங்கச் செய்தல்.
இறவா இன்பம் - எஞ்ஞான்றும் கெடாத வீட்டின்பம். “இறவாத வின்ப அன்புÓ (1776).