தங்கோனைத் தவத்தாலே தத்துவத்தின் வழிபடுநாட் பொங்கோத ஞாலத்து வற்கடமாய்ப் பசிபுரிந்தும் “எங்கோமான் றனைவிடுவே னல்லேÓ றிராப்பகலுந் கொங்கார்பன் மலர்கொண்டு குளிர்புனல்கொண் டர்ச்சிப்பார், | 2 | (இ-ள்) தங்கோனை ...வழிபடுநாள் - தமது பெருமானைத் தவத்தினாலே தத்துவத்தின் நெறியாலே வழிபட்டுவருகின்ற நாளிலே; பொங்கோதம்.....பசிபுரிந்தும் - பொங்கும் கடல் சூழ்ந்த உலகத்திலே வற்கடம் வந்து உணவின்றிப் பசிமிகுந்திருந்தும்; எங்கோமான்.....இராப்பகலும் - எமது பெருமானை நான் விடுவேனல்லேன் என்று இரவும் பகலுமாக; கொங்கார் .....அருச்சிப்பார் - மணமுடைய பல மலர்களைக்கொண்டும்; குளிர்ந்த நீரினைக் கொண்டும் அருச்சிப்பாராகி, (வி-ரை) தவம் - சிவபூசை; தத்துவத்தின் வழிபடுதலாவது, எல்லாப் பொருள்களையும் தத்துவங்களின் வைத்து உண்மை யுணர்த்தி வழிபட்டுய்யும் நெறியினை வகுக்கும் சிவாகம விதியாலே. வற்கடம் - பஞ்சம் - வறுமைக்காலம். பசிபுரிந்தும் - பசியினால் வருந்திய போதிலும்; புரிதல் ஈண்டு மிக உண்டாதல் என்னும் பொருட்டு. எங்கோமான்றனை விடுவேனல்லேன் - “கற்பகமே யானுன்னை விடுவே னல்லேன்Ó (தேவா - அரசு); கோமான்றனை - கோமானது பூசையினை. மலர்கொண்டு புனல்கொண்டு அர்ச்சிப்பார் - பூவுநீருங் கொண்டு பூசிப்பார்; “புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு Ó (திருமந்). “பூவொடு நீர் சுமந்தேத்திÓ (தேவா - அரசு). இராப்பகல் - இரவும் பகலும்; உம்மைத்தொகை. அருச்சிப்பாராகி - வீழ்ந்து அயர்வாராகி (4129) அடைய - நீங்கி - எழுந்திருந்தார் (4130) என்று கூட்டுக. அருச்சனை - பூசை என்னும் பொருளில் வந்தது. |
|
|