பாடல் எண் :4130

சங்கரன்ற னருளாலோர் துயில்வந்து தமையடைய
அங்கணனுங் கனவின்க னருள்புரிவா “னருந்துணவு
மங்கியநாள் கழிவளவும் வைப்பதுநித் தமுமொருகா
சிங்குனக்கு நாÓ மென்ன விடர்நீங்கி எழுந்திருந்தார்.
4
(இ-ள்) சங்கரன்றன்....அடைய - சங்கரருடைய திருவருளாலே உறக்கம் வந்து தம்மையடைய; அங்கணனும்......புரிவார் - இறைவரும் கனவு நிலையில் அவருக்கு அருள் செய்வாராய்; அருந்துணவு......என்ன - உண்ணும் உணவு குறைந்த காலம் தீருமளவும் இங்கு உனக்கு நாம் நித்தமும் ஒரு காசு வைப்போம் என்று அருளிச் செய்ய; இடர் நீங்கி எழுந்திருந்தார் - துன்பம் நீங்கித் துயிலுணர்ந்து எழுந்தனர்.
(வி-ரை) சங்கரன் - இன்பஞ் செய்பவன்; சிவபெருமான்; இப்பெயராற் கூறியது இங்கு இன்பவருள் செய்யும் நிலைக் குறிப்பு.
அருளாலோர் துயில்வந்து தமையடைய - சிவபூசை செய்தற்கண் துயில் சோர்வு சோம்பு முதலியன வரத்தகாது; வரின் அது கழுவாய் செய்யத்தக்கது என்பது சிவாகமவிதி; ஆயின் இங்கு வந்த துயில் அதன்பாற்படா தென்பது குறிக்க அருளால் - வந்து - அடைய என்றார். பூசைக்காகக் குளிக்க நின்ற நமிநந்தியடிகள் பாலும் (1891), திருப்புகலூரில் வேண்டிய பொன் பெறாத நிலையில் திருமுன்றிலில் ஒருபாலிருந்த நம்பிகள் பாலும் (3202) உறக்கம் அருளால் வந்த நிலைகள் இங்கு நினைவுகூர்தற்பாலன.
அங்கணன் - அடியாரிடர் காணமாட்டாது அருள்பவர்.
அருந்துணவு மங்கியநாள் கழிவளவும் - உணவுப் பண்டங்கள் குறைவுபடும் வற்காலம் நீங்குமளவும்; திருவீழிமிழலையில் வறுமைக்காலம் வரவே, எந்தம் பெருமக்களாகி ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய அரசுக ளிருவருக்கும் நித்தம் ஒரோர் காசு, அவ்வறுமைக்காலம் நீங்கி மழைபெய்து உணவுப்பண்டம் செழிக்குமளவும் இறைவர் தந்தருளிய செயல் காண்க. வறுமைக் காலம் உயிர்களின் கன்மானுபவத்தின் பொருட்டும், அக்கன்மத் தொகுதி கூடிய நிலை கழியுமளவும் வரத் தருவது இறைவரருள். ஆனால் அக்கன்மப் பயன்களின் துன்பம் சிவச்சார்புடையாரைச் சாரா என்பதும், அதற்கு இறைவர் தாமே தீர்வு அருளுவர் என்பதும் உண்மைநூற் றுணிபுகள்.
இங்கு நாம் உனக்கு நித்தமும் ஒரு காசு வைப்பது - என்க; வைப்பது ஆகும் - வைப்போம் என்க. காசு - பொற்காசு.