பாடல் எண் :4132

அந்நாள்போ லெந்நாளு மளித்தகா சதுகொண்டே
இன்னாத பசிப்பிணிவந் திறுத்தநா ணீங்கியபின்
மின்னார்செஞ் சடையார்க்கு மெய்யடிமைத் தொழில்செய்து
பொன்னாட்டி னமரர்தொழப் புனிதரடி நிழல்சேர்ந்தார்.
6
(இ-ள்) அந்நாள் போல்...கொண்டே - அந்நாளைப் போலவே பின் எந்நாளிலும் இறைவர் நாடோறும் அளித்த காசினைக் கொண்டே; இன்னாத.....நீங்கிய பின் - துன்பமுடைய பசி வந்து சங்கடம் விளைத்த வற்கடம் நீங்கியபின்; மின்னார்.....செய்து - ஒளியுடைய செஞ்சடையினையுடைய இறைவரது மெய்யடிமைத் தொழிலாகிய அகம்படித் தொண்டு செய்து இருந்து; பொன்னாட்டின் ...சேர்ந்தார் - தேவலோகத்தில் உள்ள தேவர்கள் தொழும்படி சிவபெருமான் றிருவடியினைச் சேர்ந்தனர்.
(வி-ரை) எந்நாளும் அளித்த கரசு - நாடோறும் இறைவர் வைத்தருளிய படிக்காசு;
அது கொண்டே - நீங்கியபின் - என்க; அதன் உதவியினைக்கொண்டே அமுதுண்டு துன்பம் நீங்கியபின். இறுத்தல் - தங்குதல்; கொடுத்தல்.
மின்னார்....செய்து - மெய்யடிமை - மெய் - உண்மையான என்றும், திருமேனிக்காகிய என்றும் உரைக்கநின்றது. செய்து - இது வற்கடம் நீங்கியபின் தமது முன்னை யியல்பிற் செய்தவாறே செய்த என்பதாம். பொன்னாடு - தேவருலகம்; சிவலோகமுமாம்.
அமரர் தொழ - சிவன் அடியார்கள் வீடுபெறும் நிலை தேவர்கள் தொழத் தக்கது என்பதாம்.