மன்னவன்பாற் பெறுஞ்சிறப்பின் வளமெல்லா மதியணியும் பிஞ்ஞகர்தங் கோயிறொறுந் திருவமுதின் படிபெருகச் செந்நென்மலைக் குவடாகச் செய்துவருந் திருப்பணியே பன்னெடுநாட் செய்தொழுகும் பாங்குபுரிந் தோங்குநாள், | 2 | (இ-ள்) மன்னவன்பால்......வளமெல்லாம் - அரசனிடம் அத்தொழிலிற் பெறுகின்ற சிறந்த வளங்களை யெல்லாம்; மதியணியும்....திருப்பணியே - சந்திரனை அணிந்த இறைவரது கோயில்கள் தோறும் திருவமுதுக்குரிய படித்தரம் பெருகுவதற்காகச் செந்நெல்லினை மலைச்சிகரம் போலக் குவித்துச் செய்துவரும் திருப்பணியினையே; பன்னெடு.....ஓங்குநாள் - பல நீண்ட காலங்கள் செய்துவருகின்ற ஒழுங்கு பெறும்படி செய்து பணிசெய்து சிறந்து வாழும் நாளிலே. (வி-ரை) பெறும் சிறப்பின் வளம் - சேனாபதித் தன்மைக்காகவும், அதனில் விளைக்கும் வெற்றியின் புகழுக்காகவும் ஊதியமாகவும் சிறப்பாகவும் பெறும் பொருள்கள்; வளம் .ஊதியம். சிறப்பு - அவ்வப்போது செய்வது. திருவமுதின்....குவடாக - இறைவரது பூசையினில் வேண்டும் திருவமுதுக் கட்டளை மேன்மேற் பெருகும்படிக்குரிய செந்நெல்லினை மலையின் உச்சி போலாக; மலைக்குவடு ஆக - குவடு - சிகரம்; நெற்குவைகள் சிகரத்தையுடைய மலைகளைப் போன்றன என்பது; ஆக - ஆக்கச் சொல் உவமை குறித்தது. செய்துவரும் திருப்பணியே - சிவனுக்கமுதுபடி பெருகச் செய்தல் திருப்பணியா மென்பது; சிவனுக்காகும் படியினைக் குறைத்தல் மாபாவ மென்பதும், அது ஆயுளைக் குறைக்கு மென்பதும் மந்தாதர என்னும் அரசரது வரலாற்றினின்றும் அறியப்படும். (1116) இவையெல்லாம் எண்ணாது சிவன் கோயிற் படித்தரத்தினைக் குறைத்தலும், சிவதிரவியங்கொண்டு ஆடம்பரங்கள் செய்தலும், பசுதருமங்களே மேலானவை (மருத்துவச்சாலை - தண்ணீர் வசதி - சாலை முதலியன) என்று கொண்டு மனம்போனபடி சிவனுக்குரிய பதிப்பொருள்களை தத்தம் அற்ப அதிகாரச் செருக்குக்கொண்டு பசுதருமங்களிற் செலவு செய்தலும் இந்நாளிற் கோயில் அதிகாரிகளின் கொடுந் தொழிலாயிருக்கக் காண்கின்றோம். கொடிது! கொடிது!! பாங்கு - அதற்கு வேண்டும் ஒழுங்குகள்; ஓங்குதல் - சிறப்புறுதல். ஒழுகுநாள் - என்பதும் பாடம். |
|
|