பாடல் எண் :4136

வேந்தனே வலிற்பகைஞர் வெம்முனைமேற் செல்கின்றார்,
பாந்தள்பூ ணெனவணிந்தார் தமக்கமுது படியாக
ஏந்தலார் தாமெய்து மளவும்வேண் டுஞ்செந்நெல்
வாய்ந்தகூ டவைகட்டி வழிக்கொள்வார் மொழிகின்றார்.
3
(இ-ள்) வேந்தன்....செல்கின்றார் - அரசனது ஏவலினாலே பகைவர்களது கொடிய போரின் மேற் செல்கின்றாராகிய அந்நாயனார்; பாந்தள்.....கட்டி - பாம்பினையே பூணாக அணிந்த இறைவர்க்குத் திரு அமுதுக்குரியபடியாகப் பெருமை யுடைய அவர்தாம் வரும் வரையில் வேண்டிய அளவு செந்நெல் பொருந்திய நெற்கூடுகளைக்கட்டி; வழிக்கொள்வார் மொழிகின்றார் - பயணம் செல்பவர் சொல்கின்றாராகி,
(வி-ரை) செல்கின்றார் - செல்கின்ற நாயனார் அவ்வாறு செல்லும் போது. ஏந்தலார் - மேன்மையுடையவர் ஏந்தல் - ஆண்பாற் சிறப்புப் பெயர்;
தாம் எய்துமளவும் - போர் முற்றித் தாம் திரும்பிவரும் வரையில்.
அமுது படியாக - வேண்டும் - என்று கூட்டுக; வேண்டும் - வேண்டிய அளவு. ஆக - ஆகும் பொருட்டு.
செந்நெல் - சிவன் அமுதுக்குச் செந்நெல்லே சிறந்தது. ஏனைக் கார் நெல் முதலியவை அத்துணைச் சிறப்பில; அரிவாட்டாய நாயனாரது வரலாறும், பிறவும் பார்க்க; ஆனால் பொருளாசையினால் கோயிலுக்குள்ள சிறந்த சம்பா நெல்லை விற்றுவிட்டுத் தாழ்ந்த குறுவை நெல்லை அழுதுக்கு வைக்க என உத்தரவிடும் கோயில் அதிகாரிகளையும் காண்பது இந்நாளின் காலக்கொடுமையும் எங்கள் பாவப்பயனுமாம்; கொடுமை!
வாய்ந்த கூடு - அளவு குறித்துப் பொருந்திய நெற்கூடுகள்.
வழிக்கொள்வார் - பயணம் போவாராகிய நாயனார்.