பாடல் எண் :4138

மற்றவர்தாம் போயினபின் சிலநாளில் வற்காலம்
உற்றலுமச் சுற்றத்தா “ருணவின்றி யிறப்பதனிற்
பெற்றமுயர்த் தவரமுது படிகொண்டா கிலும்பிழைத்துக்
குற்றமறப் பின்கொடுப்போÓ மெனக்கூடு குலைத்தழிந்தார்;
5
(இ-ள்) மற்றவர்தாம்.....உற்றலும் -அவர் போன பின்பு சிலநாளில் வறுமைக்காலம் வருதலும்; அச் சுற்றத்தார் - (முன்கூறிய அவ்வாறு அறிவுறுத்தப் பெற்ற) அந்தச் சுற்றத்தார்கள்; உணவின்றி......என - உணவில்லாமற் சாவதனிலும் இடபத்தைக் கொடிமேல் உடைய இறைவரது திருவமுதுக்குரிய படி நெல்லினைக் கொண்டாகிலும் உயிர் பிழைத்துக் குற்றமில்லாமற் பின்னர்த் திரும்பக் கொடுத்து விடுவோம் என்று துணிந்து; கூடு குலைத்து அழித்தார் - நெற்கூடுகளைக் குலைத்து அழித்தனர்.
(வி-ரை) மற்று அவர் - முன் கூறியபடி மறுத்து ஆணையிட்டுக் கூறிய அவர் என்றதும் குறிப்பு.
வற்காலம் உற்றலும் - வற்காலம் - பஞ்சம்; வற்கடம்; உணவுப் பொருள்களின்றி மக்கள் வருந்தும் காலம்; உறுதலும் என்பது உற்றலும் என நின்றது.
அச்சுற்றத்தார் - முன் நாயனாரால் ஆணையிட்டும் வந்தனையாலுரைத்தும் அறிவுறுத்தப்பட்ட அந்த என அகரம் முன்னறி சுட்டு; சுற்றத்தார் - தம் தமர்களாயினால் (4137).
உணவின்றி இறப்பதனில் - அமுதுபடி கொண்டாகிலும் பிழைத்து - இந்நெல் இல்லையேல் உணவின்றி இறப்போம்; அவ்வா றிறந்துபடுவதனினும், அமுதுபடி நெல்லினைக் கொண்டு உணவுண்டு பிழைத்திருந்து என்றபடி; கொண்டாகிலும் பிழைத்து - உம்மை, இது செய்யத்தகாததேயாயினும் உயிர்க்கிறுதிநேரிடுவதானால் பிழைசெய்தேனும் உயிர்காக்க என்றதோர் உலக நீதியினை எண்ணிக் கூறியது; பிழைத்து - உயிர்தப்பிப் பிழைத்து; பிழைசெய்து என்ற குறிப்பும் காண்க.
குற்றமறப் பின் கொடுப்போம் - குற்றம் - இது பெருங்குற்றமா மென்பதனை அறிந்தே துணிந்தனர் என்பது; பின் கொடுப்போம் - நெல்லைத் தாமே கவர்ந்து கொள்ள எண்ணினாரிலர்; இப்போது கொண்டு உயிர்காத்துப் பின் திரும்பக் கொடுத்தலே அவர் கருதியது. Temporary misappropriation என்பர் நவீனர்; இவ்வாறு இந்நாள் உலகியற் சட்டத்தினும் இது குற்றமாதல் காண்க; அழித்தார் - கூட்டினைக் குலைத்து அழித்ததனோடு ஆணையினையும் அழித்தனர் என்பார் குலைத்தார் என்றமையாது குலைத்து அழித்தார் என்றார். குற்றம் அறப் பின் - பஞ்சம் நீங்கிய பின்பு என்றலுமாம்; கூடு - நெற்கூடு; அழித்தார் - நெல்லைச் செலவழித்தார் என்றலுமாம்.
உணர்வின்றி என்பது பாடமாயின் தாமே உணர்ந்து ஒழுகவேண்டிய உண்மையினைக், கட்டுரைத்து எடுத்துணர்த்தவும் உணரகில்லாமல் என்றுரைக்க.
உற்றிட - என்பதும் பாடம்.