பாடல் எண் :4139

மன்னவன்றன் றெம்முனையில் வினைவாய்த்து மற்றவன்பால்
நன்னிதியின் குவைபெற்ற நாட்டியத்தான் குடித்தலைவர்
அந்நகரிற் றமர்செய்த பிழையறிந்த தறியாமே
துன்னினார் “சுற்றமெலாந் துணிப்பÓ னெனும் துணிவினராய்.
6
(இ-ள்) மன்னவன்றன்......தலைவர் - அரசனது போர் முனையில் வெற்றிகொண்டு (மீண்டு) அவ்வரசன்பாலே நல்ல நிதியின் குவியலினைப் பெற்ற நாட்டியத்தான் குடித்தலைவராகிய கோட்புலியார்; அந்நகரில்....அநிற்து - அந்நகரத்தில் தம் சுற்றத்தார்கள் செய்த பிழையினை அறிந்து; சுற்றமெல்லாம்.....துணிவினராய் - சுற்றத்தா ரெல்லாரையும் துணிப்பேன் என்னும் துணிந்து கொண்டவராகி; அது அறியாமே துன்னினார் - தாம் அறிந்து துணிவுகொண்டதனை அவர்கள் அறியாத நிலையில் வந்து சேர்ந்தனர்.
(வி-ரை) வினைவாய்த்து - வினை - போரில் தாம் நினைத்துச் சென்ற செய்கையாகிய வெற்றி; வாய்த்தல் - கிடைக்கப்பெறுதல். வினை - போர்த்தொழில்; ஈண்டு அதில் வெற்றியைக் குறித்து.
மற்றவன்பால்....பெற்ற - போரில் வெற்றி பெற்றுவந்த சேனைத் தலைவருக்கு அரசர் செய்யும் சிறப்பு; சிறுத்தொண்ட நாயனார் புராணம் பார்க்க.
அந்நகர் - தமது நகரும் அரசனது நகரமுமாகிய அந்த என முன்னறிசுட்டு. அந்நகரினைக் குறிப்பார் நாட்டியத்தான் குடித்தலைவர் என்றார்.
அறிந்து - தெரிந்துகொண்டு; அது அறியாமே - தாம் அறிந்த அதனைச் சுற்றத்தார் அறியாதபடி மறைத்து ஒழுகி. தமது கருத்து நிறைவேற்ற இது வேண்டப்பட்டது.
துன்னுதல் - சேர்தல்; துணிப்பன் - துண்டமாக்குவன்; துணி - துண்டம்; துணிவினர் - துணிந்த காரணமும் பயனும் மேலிரண்டு பாட்டுக்களானும் கூறுகின்றார். துணிவினராய்த் துள்ளினார் என்க.