பாடல் எண் :4140

எதிர்கொண்ட தமர்க்கெல்லா மினியமொழி பலமொழிந்து
மதிதங்கு சுடர்மணிமா ளிகையின்கண் வந்தணைந்து
“பதிகொண்ட சுற்றத்தார்க் கெல்லாம்பைந் துகினிதியம்
அதிகந்தத் தளிப்பதனுக் கழைமின்கÓ ளென்றுரைத்து,
7
(இ-ள்) எதிர்கொண்ட....மொழிந்து - தம்மை எதிர்கொண்டு வரவேற்ற சுற்றத்தாரெல்லாருக்கும் இனிய மொழிகள் பலவற்றையும் சொல்லி; மதிதங்கு.....அணைந்து - சந்திரன் தங்கும் ஒளியும் அழகும் உடைய தமது திருமாளிகையில் வந்து அணைந்து; பதிகொண்ட.........உரைத்து - அப்பதியில் உள்ள சுற்றத்தார்களுக்கெல்லாம் பைந்துகிலும் நல்ல நிதியமும் தந்தளிப்பதற்கு அழையுங்கள் என்று சொல்லி,
(வி-ரை) எதிர்கொண்ட - தம்மை எதிர்கொண்டு வந்து வரவேற்ற. மதிதங்கு - மாளிகையின் உயர்ச்சி குறித்தலு; மதி - உண்மையறிவு என்று கொண்டு மெய்யறிவே உருவமாக உள்ள நாயனார் தங்குகின்ற என்று உரைக்கவும் நின்றது; மதி - ஆகுபெயர். பைந்துகில் - பசுமை - புதுமை குறித்தது; அழகு என்றலுமாம்; அதிகம் - மிகுதியும். துகில் - பட்டாடை. தூய நன்மை பயந்தலால் இது பொய்மையாகாமை உரைக்க.